Breaking News

விளையாட்டு மைதானமின்றி தேசியமட்ட போட்டிகள் வரை சாதிக்கும் சிலாபம் நஸ்ரியா கல்லூரி மாணவர்கள்.

புத்தளம் எம்.யூ. எம். சனூன்,  கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்

சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரியில் பாடசாலைக்கான சிறந்ததொரு விளையாட்டு மைதானம் இல்லாமையினாலும் கூட இந்த பாடசாலை மாணவர்கள் அண்மைக்காலமாக விளையாட்டுதுறையில் பல சாதனைகளை நிலை நாட்டி வருகின்றனர்.


அண்மையில் குருநாகல் வெலகெதர விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட போட்டிகளில் நஸ்ரியா கல்லூரி மாணவன் எம்.என்.எம். நாஸிஹ், 20 வயதுக்குட்பட்ட தடகள போட்டியில் 4 ம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார். 


இந்த மாணவன் நஸ்ரியா மத்திய கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மட்ட தடகள போட்டியில் பங்குபற்ற இருப்பது சிறப்பம்சமாகும். 


இந்த மாணவர்

பாடசாலைகளுக்கு இடையிலான கோட்ட மட்டம், வலய மட்டம், மாகாண மட்டம் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.


அஞ்சல் ஓட்டம் உட்பட பாடசாலை கிரிக்கெட் அணியில் தனது திறமையை பாரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறார்.  


இந்த மாணவரை போன்றே  பல மாணவர்கள் பாடசாலையில் விளையாட்டு மைதானம் இன்றியே தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். 


பாடசாலை சமூகத்தின் சிறந்த வழிகாட்டல்களும், அதிபர் மற்றும் ஆசிரியர்களின்  ஒத்துழைப்பும் இவர்களை போன்ற மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பது வரவேற்கத்தக்கது


சாதிக்க துடிக்கும் இவரை போன்ற பல மாணவர்கள் பயிற்சியுடனும், மனவலிமையுடனும் முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments

note