Breaking News

காலநிலை மாற்றம் சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் பற்றி கற்பிட்டியில் இடம்பெற்ற செயலமர்வு

(கற்பிட்டி எச்.எச்.எம் சியாஜ்)

காலநிலை மாற்றம் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியார்க்கு ஏற்படும் தாக்கம் மற்றும் அவற்றை குறைப்பதற்கான உபாயங்கள் மற்றும் அது தொடர்பான நிதி வசதிகள் பற்றிய செயலமர்வுடன் கூடிய பயிற்சி பட்டறை கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் இரு வெவ்வேறு குழுக்களிடையில் கற்பிட்டி பிரதேச செயலக மற்றும் நரக்கள்ளி தனியார் கல்யாண மண்டபத்திலும் இடம்பெற்றது 


கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் றஞ்ஞன் பியதாச தலைமையிலான குழுவின் நெறிப்படுத்தலில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) முழுமையான பங்களிப்புடன் இடம்பெற்ற செயலமர்வு பயிற்சி பட்டறை தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.


பெண்கள் தலைமையிலான சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் காலநிலை மாற்றத்தால் எதிர்கொண்ட பாதிப்புக்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான  நிதி நிறுவனங்கள் என்ற தொனிப்பொருளில் இச் செயலமர்வுடன் கூடிய பயிற்சி பட்டறை இடம்பெற்றது.


கற்பிட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற செயலமர்வு பயிற்சி பட்டறையில் கற்பிட்டி பிரதேச செயலாளர் சமில விஜயசிங்க ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.


இந் நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் றஞ்ஞன் பியதாச, வானிலை அவதானத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சரத் பிரேமலால், சுற்றாடல் அமைச்சின் காலநிலை மாற்றம் தொடர்பிலான ஆலோசனைக் குழுவின் தலைவர் ரஞ்சித் புண்ணியவர்தன, சுற்றாடல் தொடர்பிலான ஆய்வாளர் இந்துசன், மற்றும் நிகழ்ச்சிகளின் இணைப்பாளர் பேராசிரியர் காமினி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்து கொண்டு பெண்கள் தலைமையிலான சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்து கொண்டதுடன் இங்கு வழங்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையாக கொண்டு முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களிடம் தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதுடன்  செயலமர்வின் இறுதியில் கலந்து கொண்ட பெண்கள் தலைமையிலான சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பிரதேச  ஊடகவியலாளர்களுக்கிடையில் கலந்துரையாடல்களும் கருத்து பரிமாற்றங்களும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.












No comments

note