ஜெயா பார்ம் வெற்றி கிண்ண கால்ப்பந்தாட்ட தொடர் ஒன்றில் புத்தளம் லிவர்பூல் அணி வெற்றி.
புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்
புத்தளம் உதைபந்தாட்ட லீக் நடாத்தி வருகின்ற புதிய உதைப்பந்தாட்ட தொடரான ஜெயா பார்ம் வெற்றிக்கிண்ண தொடருக்கான ஆட்டம் ஒன்றில் புத்தளம் லிவர்பூல் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஜெயா பார்ம் நிறுவனத்தின் புத்தளம் பிராந்திய நிறைவேற்று பணிப்பாளரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான பர்வீன் ராஜா இத்தொடருக்கு பூரண அனுசரணை வழங்கி வருகிறார்.
விலகல் முறையிலான இத்தொடரில் புத்தளம் உதைபந்தாட்ட லீக்கில் கட்டுப்பட்டுள்ள 12 அணிகள் பங்கேற்கின்றன. ஏ மற்றும் பீ பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 11 ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன.
சகல போட்டிகளும் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றன நிலையில் சனிக்கிழமை (03) மாலை விம்பிள்டன் மற்றும் லிவர்பூல் அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெற்றது.
நடைபெற்ற போட்டியில் லிவர்பூல் அணி 02 : 00 கோல்களினால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
லிவர்பூல் அணிக்காக அவ் அணியின் முன்கள வீரர்களான முஸக்கீர் மற்றும் ஆஷிக் ஆகியோர் கோல்களை செலுத்தினர்.
போட்டிக்கு நடுவர்களாக எம்.ஆர்.எம்.அம்ஜத், ஏ.ஏ.கியாஸ், ஏ.ஓ.அஸாம், எம்.இஸ்பாக் அலி ஆகியோரும், போட்டி ஆணையாளராக புத்தளம் உதைபந்தாட்ட லீக்கின் நிறைவேற்று குழு உறுப்பினர் எம்.ஜெனூசனும் கடமையாற்றினார்.
லிவர்பூல் கழக முகாமையாளர் எம்.ஓ.ஜாக்கிர் அணியை வழி நடாத்தி இருந்தார்.
நிகழ்வில் அதிதிகளாக புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவரும், புத்தளம் நகர சபை முன்னாள் தலைவருமான எம்.எஸ்.எம்.ரபீக், லீக்கின் உப தலைவரும், நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ரனீஸ் பதியுதீன், தொடரின் அனுசணையாளர் ஜெயா பார்ம் புத்தளம் பிராந்திய முகாமையாளரும், நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான பர்வீன் ராஜா, புத்தளம் லீக்கின் முன்னாள் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் இணைப்பு செயலாளருமான ஜே.எம்.ஜௌஸி, புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குலதுங்க, புத்தளம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்று பணிப்பாளர் அருள்தாஸ், லெஜன்ட்ஸ் அணி தலைவர் முஹம்மது யமீன் உள்ளிட்ட லீக் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
No comments