Breaking News

மறைந்த டாக்டர் இல்யாஸ் புரட்சிகரமான அரசியல்வாதி அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

(நமது நிருபர்)

துணிச்சல் மிக்க அரசியல்வாதி ஒருவரை புத்தளம் முஸ்லிம்கள் மட்டுமல்லர், இலங்கை வாழ் முஸ்லிம்கள் இழந்திருப்பதாக டாக்டர் ஐ.எம். இல்யாஸின் மறைவு குறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவராக இம்முறையும் களமிறங்கியிருந்த டாக்டர் ஐதுரூஸ் முகம்மது இல்யாஸ் ஒரு புரட்சிகரமான அரசியல்வாதியாக பலராலும் நோக்கப்படுகிறார்.


 ஆரம்பத்தில் புத்தளத்தில் உப்பு சத்தியாகிரகம் நடந்த காலத்தில் காந்திய வழியில் சாத்வீகப் போராட்டம் நடத்திய டாக்டர் இல்யாஸ், பின்னர் எங்களது ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம் .எச் எம்.அஷ்ரப் உடனான சகவாசத்தின் பயனாக  புரட்சிகரமான அரசியல்வாதியொருவராக மாறினார்.


1979 ஆம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியின் பிரதிபலிப்பாக இலங்கையில்   அந்தப் போராட்டத்தை அவர் ஆதரித்தார். மக்களோடு மக்களாக வாழ்ந்து, தேர்தல் காலங்களைத் தவிர பெரும்பாலும் இலை மறை காயாக அவர் இருந்த போதிலும், அவரிலிருந்து புரட்சிகரமான எண்ணம் எப்பொழுது புறப்படுகிறது என்பது பலருக்கு  விசித்திரமாக இருந்திருக்கிறது. அதனாலேயே அவரை  வித்தியாசமான அரசியல்வாதியொருவராக நான் பார்க்கிறேன். மக்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக நடந்து கொள்ளும் அவர் காலத்திற்கு காலம் ஏற்படும் அரசியல், சமூக எழுச்சியினால் ஏற்படும் விழிப்புணர்ச்சியினாலும் தன்னைத் தானாகவே புடம் போட்டுக்கொண்டு,  புதுமையைப் புகுத்தியவராக இருந்திருக்கிறார்.


மாவட்ட சபை தேர்தல், மாகாண சபை தேர்தல் ஆகியவற்றில் மட்டுமல்ல 1994 ஆம் ஆண்டில் எங்களது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றார். இவ்வாறான பல்துறை ஆளுமையின் இழப்பு உண்மையிலேயே கவலைக்குரியது.


அன்னாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவன பாக்கியத்தை வழங்குவானாக


 அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும்,  உறவினர்களுக்கும், புத்தளம் வாழ் மக்களுக்கும் மன ஆறுதலை வழங்குவானாக.




No comments

note