Breaking News

மீண்டும் கொழும்பு குப்பைகள் புத்தளம் அருவக்காட்டுக்கு ரயில் மூலம் கொண்டு வரும் திட்டத்திற்கு எதிர்ப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கொழும்பிலிருந்து குப்பைகளை ரயிலில் புத்தளத்திற்கு கொண்டு வரும் வேலைத்திட்டம் ஞாயிறு (25) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கத்தின் மேற்படி திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என கோரி புத்தளத்தில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


சுமார் இரண்டு மணி நேரம் புத்தளம் - நூர்நகர் ரயில் நிலையத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தூய தோசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்கார் உட்பட இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.


பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக கொழும்பிலிருந்து குப்பைகளை ஏற்றிய விஷேட ரயில் புத்தளம் அருவக்காடு – சேராக்குளி பகுதிக்கு வருகை தரவுள்ளதாக க்ளீன் புத்தளம் குழுவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


சந்ததி காக்கும் சரித்திரப்போராட்டம் கிளீன் புத்தளம் இன்னும் மரணிக்கவில்லை. நீதிமன்றத்திலே அரசாங்கத்தோடு வழக்காடிக்கொண்டிருக்கின்றோம். இப்படியான ஒரு சூழலில் யாருக்கும் தெரியாமல் ரயில் வண்டிகளில் குப்பை கொண்டுவரப்பட்டிருக்கிறது.


இதனை புத்தளம் சமூகத்தின் சார்பாக கிளீன் புத்தளம் அமைப்பின் சார்பாக எதிர்ப்பினை தெரிவித்தோம். அமைதியாக ஜனநாயமுறைப்படி நடாத்தப்பட்ட போராட்டம் இது எனவும் தெரிவித்தனர்.









No comments

note