பாராளுமன்ற அரசியல் வாழ்வில் முப்பது வருடங்களைைப் பூர்த்தி செய்துள்ள தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம்!.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் முன்னாள் நீதி, உயர் கல்வி அமைச்சருமான சட்ட முதுமானி கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் பாராளுமன்ற அரசியல் வாழ்வில் 30 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளார்.
அவர் கலகெதர - கண்டி ஜப்பார் மகாவித்தியாலயம், கொழும்பு ரோயல் கல்லூரி, 1980-1983 இலங்கை சட்டக்கல்லூரி, 1984 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணி, 1984 ஆம் ஆண்டு இங்கிலாந்து சட்டமன்ற பொலிட்சர் இறுதி பரீட்சை சித்தி, அடிப்படை உரிமை மீறல் வழக்குகளில் குற்றவியல் மேன்முறையீட்டு வழக்குகளில் சட்டத்தரணியாக 10 ஆண்டுகள் அனுபவம் நிறைந்த ஆளுமை மிக்க தலைவராவார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி நியமிக்கப்பட்டு அதே மாதம் 25ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் குழுக்களின் பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டார். பாராளுமன்ற வரலாற்றில் மிகவும் வயது குறைந்தவராக தெரிவு செய்யப்பட்ட பெருமை தலைவரையே சாரும்.
1991 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய செயற்குழுவில் தெரிவு செய்யப்பட்ட அவர், 1992 ஆம் ஆண்டில் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராகவும் 1993 தொடக்கம் 2000 ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளராகக் கடமையாற்றினார்.
1991 தொடக்கம் 1992 வரை சர்வ காட்சி மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிரந்தர பிரதிநிதியாக மாநாட்டில் கடமையாற்றினார். 1996 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் பெயரில் பாராளுமன்ற உறுப்பினருக்கான கருத்தரங்கில் கலந்து கொண்டதுடன் இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஸ்டி தீர்வு தொடர்பாக அங்குள்ள ஃபிரைபேர்க் உயர் கல்வி நிறுவனத்தில் விரிவுரை நிகழ்த்தினார்.
1997 இல் நீதி அடிப்படை உரிமைகள் பற்றிய அவுஸ்திரேலிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கு அந்நாட்டு அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட அதே வேளை பாராளுமன்றத்தில் சபாநாயகராக அமரர் KP. ரத்நாயக்க இருந்த காலத்தில் குழுக்களின் பிரதி தலைவராக அக்கிராசனத்தில் அமர்ந்து பாராளுமன்றத்தை வழி நடத்திய விதம் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சிலாகித்து பேசப்பட்டது. எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக ACS. அமீன் தலைவர் அஷ்ரப் அவர்களைப் பார்த்து, "உங்களது செயலாளர் உங்களை கட்டுப்படுத்துகிறார்" என கூறிய போது, "அவரை செயலாளராகப்பெற்றிருப்பது எனக்கு பெருமை தருகிறது" என்று தலைவர் அஷ்ரப் கூறியதை நினைத்துப் பார்க்கின்றபோது நமக்கும் பெருமை தருகிறது.
பொதுநலவாய, சார்க் தேர்தல் கண்காணிப்பு குழுவின் இலங்கை பிரதிநிதியாக தன்சானியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஹொங்கொங், சிம்பாப்வே போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெருமை தலைவரையே சாரும். இனப்பிரச்சினை தொடர்பாகவும் மோதல் தவிர்ப்பு நடவடிக்கை சம்பந்தமாக ஆராயும் பொருட்டு ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில் அட்லாண்டா, வொஷிங்டன், கலிபோர்னியா, இலாஹோ, மின்னசொட்டா ஆகிய மாநிலங்களுக்கு விஜயம் செய்தவராவார்.
2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி தலைவர் MHM. அஷ்ரப் அவர்கள் அம்பாறை நோக்கி விஜயம் செய்த ஹெலிகொப்டர் கேகாலை மாவட்டத்தில் விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து (ஊரகந்த மலை) அவரும் குழுவினரும் மரணத்தைத் தழுவிக் கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து அவரது இடத்திற்கு தலைவர் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.
கடந்த 24 ஆண்டு வரை கட்சிக்குள்ளும், வெளியிலும் பலவிதமான சவால்களுக்கு முகம் கொடுத்தவர், சவால்களுக்கு அஞ்சாமல் உறுதியான அடிப்பாறை போன்று உறுதியாக சவால்களை முறியடித்து வருகின்ற ஆளுமை மிக்க தலைவராவார்.
பேரியல் அஷ்ரப் அவர்களால் ஏற்பட்ட சவால், அதாவுல்லா உச்சபீட உறுப்பினர்கள் 10 பேரை அழைத்துக் கொண்டு வெளியேறியதுடன் கட்சியின் தலைவர் நானே என்றும் பாராளுமன்றத்தில் முழங்கியது, 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது ஹரிஸ், அன்வர் இஸ்மாயில் கட்சியை விட்டு விலகி அதாவுல்லா அணியில் சேர்ந்தது, றிஷாட் பதியுதீன் 3 எம்பிக்களை அழைத்துக் கொண்டு கட்சியை உடைத்து பலவீனப்படுத்தியது, என பல சவால்களுக்கும் முகம் கொடுத்து வந்துள்ளார். இன்றும் அச்சவால் நீடித்துக் கொண்டே வருகிறது.
அவர் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் ஜனநாயகம் தலைத்தோங்குவதற்கும், மனித உரிமைகள் மீறல், சமத்துவம் இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களின் மறுக்கப்பட முடியாத உரிமைகள் தொடர்பாகவும் உழைத்து வருவதுடன், நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சேவை செய்து வருகின்றார்.
இன்னும் பல ஆண்டுகள் அவரது பாராளுமன்ற வாழ்வு நீடிப்பதுடன் அவரது தலைமைத்துவமும் எமக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுவதுடன், அதற்கான ஆத்ம பலமும் இறைவழிகாட்டலும் இறைத்தூதர் அவர்களின் ஆசீர்வாதமும் எப்போதும் கிடைக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்......
ஏ.எல். அப்துல் மஜீத்,
தவிசாளர்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
No comments