நுரைச்சோலையில் இரண்டாவது தலைமைத்துவ முதலீடு.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
“இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்” என்ற கூற்றுக்கு அமைய பாடசாலையின் நிருவாக கட்டமைப்பில் ஒரு படிநிலை நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் அன்றாட செயற்பாடுகளை திறம்பட நெறிப்படுத்தும் ஆற்றல், நிகழ்வுகளை முறையாக ஒழுங்கமைத்தல் மற்றும் அவற்றை தொகுத்து வழங்குதல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளை ஆரம்பம் முதல் இறுதி வரை செவ்வனே செய்து திருப்திகரமாக நிறைவு செய்யும் ஆற்றல் மிகுந்த மாணவத்தலைவர்களே இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை (06) காலை அதிபர் எம்.ஐ.எம்.இம்ரான்கான் தலைமையில், மாணவர் தலைவர்களுக்கான சின்னம் மற்றும் மேலங்கி அணிவிக்கும் நிகழ்வின் போதே இவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இவர்கள் ஏற்கனவே ‘தேசிய இளைஞர் படையணியில்’ தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிகளை நிறைவு செய்துள்ளதோடு, இம்மாதம் இறுதிப்பகுதியில் அடுத்த கட்ட பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் 100 மாணவத்தலைவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு அதில் தலைமை மாணத்தலைவர்களாக முஹம்மது அன்சார், முஹம்மது ஹனான் மற்றும் சாஹூல் ஹமீது அன்ஹா மரியம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வு அதிபரின் வழிகாட்டலில் மாணவத்தலைவர்களுக்கு பொறுப்பாக செயற்பட்டுவரும் பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எச்.எம். நபீஸ், பிரதி அதிபர்களான எச்.எம் றசீன், ஏ.சீ.எம். இக்பால் மற்றும் பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பங்குபற்றுதலுடனும் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments