நாடு பூராகவும் எனது சேவைகளை விரிவுபடுத்த ஆசைப்படுகிறேன் - ஜனாதிபதி வேட்பாளர் இன்பாஸ் கருத்து
ரஸீன் ரஸ்மின், எம்.ஏ.ஏ.காசிம்
நாடுபூராகவும் எனது சேவைகளை விரிவுபடுத்த ஆசைப்படுகிறேன் என ஜனநாயக ஐக்கிய முன்னணியின் பிரதித் தலைவரும் , அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஏ.எம்.இன்பாஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பது பற்றியும் கற்பிட்டியில் உள்ள தனது அலுவலகத்தில் உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சிறப்பு கலந்துரையாடல் இன்று (17) இடம்பெற்றது.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
கற்பிட்டி பிரதேச சபை தவிசாளராகவும், கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கம், 25 வீட்டுத் திட்டம் மீனவர் சங்கம் என்பனவற்றின் தலைவராகவும் நீண்ட காலமாக மக்களுக்கு மனப்பூர்வமாக பணியாற்றிநிருக்கிறேன்.
கற்பிட்டி பிரதேச சபை தவிசாளராக பணியாற்றிய காலத்தில் கற்பிட்டி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்வி, உட்கட்டமைப்பு, சுகாதாரம், சுற்றுலாத்துறை, மீன்பிடி மற்றும் விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிறைவான அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டுள்ளேன்.
இந்த நிலையில், நாடுபூராகவும் எனது சேவைகளை விரிவுபடுத்தி, இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
எமது நாடு இனவாதமில்லாத ஒரு நாடாக இருக்க வேண்டும். இனவாதம், மதவாதம் என்பவற்றுக்கு நான் ஒருபோதும் இடமளிக்க கூடாது.
இனவாதத்தை முழுமையாக ஒழிப்பதன் மூலமே நாட்டை முழுமையாக கட்டியெழுப்ப முடியும். இந்த நாட்டில் வாழும் அனைத்து மகளுக்கும் ஜனநாயக ரீதியாக சகல உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதே எனது நோக்கமாகும்.
புத்தளம் மாவட்டம் கடந்து நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இன, மத வேறுபாடுகளின்றி பணியாற்றுவதற்கு ஆசைப்படுகிறேன். மக்கள்தான் இதற்கு அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.
இலங்கையின் 25 மாவட்டங்களிலும் எமது கட்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எங்களோடு இணைந்து மக்களுக்கு பணியாற்றுவதற்காக அரசியலில் அனுபவமிக்க பலர் எமது கட்சியோடு இணைந்து கொள்கிறார்கள்.
எனவே, புத்தளம் மாவட்டத்தில் உள்ள அரசியல் பிரமுகர்களுக்கு மாத்திரமின்றி, நாடு முழுதும் இருக்கின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் இன, மத பேதங்களின்றி எங்களோடு இந்த தூய்மையான அரசியல் பயணத்தில் வந்து இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.
No comments