Breaking News

புத்தளம் செய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பாராட்டு.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் செய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் 2023ஆம் ஆண்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய சகல மாணவ மாணவியரையும் பாராட்டும் நிகழ்வு வியாழக்கிழமை (08) பாடசாலை பிரதான மண்டபத்தில் வெகு விமரிசையாக நிகழ்ந்தேறியது.


பாடசாலை அதிபர் எச்.யூ.எம்.யஹ்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.எம்.அர்ஜுன பிரதம விருந்தினராகவும், வடக்குக்கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ. அஸ்கா மற்றும் வடக்குக் கோட்டத்திற்கான ஆரம்பக்கல்விப் பிரிவிற்கான ஆசிரிய ஆலோசகர் ஏ.ஏ. ஹபீல் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் பரீட்சையில் பங்குபற்றிய சகல மாணவ மாணவியருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, 70 க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற அனைவருக்கும் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 


2023ஆம் ஆண்டின் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவ மாணவியருக்கும், 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவ மாணவியருக்கும் சான்றிதழ்கள்,  சின்னங்கள் மற்றும் பரிசில்களும் இதன் போது வழங்கப்பட்டன. 


இச்சின்னங்களுக்கான அனுசரணையினை தொழிலதிபர் ஏ.எச்.எம்.ரமழான் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மேலும், பாடசாலையில் முதல் மூவிடங்களைப் பெற்ற எம்.ஐ.அம்னா, எம்.எப்.எம். பாரிஹ், எம்.எச்.ஹஸீகா  அமல் ஆகியோர் விஷேட பரிசில்கள் வழங்கி பாராட்டப்பட்டனர். 


இதற்கான அனுசரணையினை தொழிலதிபர் வை.எம்.ரிஸ்வி  வழங்கியிருந்ததோடு, எதிர்வரும் காலங்களில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை மட்டத்தில் அதியுயர் புள்ளியினை பெற்றுக்கொள்ளும் மாணவ மாணவியருக்கு மடிக்கணணி (Laptop) ஒன்றினை பரிசாக வழங்குவதாக நற்செய்தியினையும் பாடசாலை நிர்வாகத்திற்கு வழங்கியிருந்தார்.


இந்நிகழ்வின் போது மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் அறங்கேற்றப்பட்டன.


இந்நிகழ்வில் தொழிலதிபர்களும், அனுசரணையாளர்களுமான வை.எம்.ரிஸ்வி, ரமழான் பவுண்டேசன் உரிமையாளர் ஏ.எச்.எம்.ரமழான், பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.ஜே.எம்.நளீம் மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் அதிபர் பெலஜியா அபுல் ஹுதா, அயல் பாடசாலை அதிபர்கள், பாடசாலையின் வீதிப்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் எம்.அஷ்ரப் தலைமையிலான பெற்றோர் குழுவினர் மற்றும் இந்நிகழ்வின் கதாநாயகர்களாகிய மாணவர்களின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.
















No comments

note