Breaking News

புத்தளத்தில் கைதான இந்திய மீனவர்கள் 35 பேரும் விளக்கமறியலில்

 ரஸீன் ரஸ்மின்

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் குதிரமலை பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடற்படையினரால் நேற்று (08) கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட மேலதிக நீதிவான் டி.எல்.ஏ.என். விமலரத்ன இன்று (09) மாலை உத்தரவிட்டுள்ளார்.


நான்கு  படகுகளில் இந்தியா தமிழகம் பகுதியில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக வருகை தந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


குறித்த இந்திய மீனவர்கள் 35 பேரும் எல்லை தாண்டி புத்தளம் - கற்பிட்டி வடக்கு குதிரமலை கடற்பகுதியில் மீன்பிடியில். ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வியாழக்கிழமை (08) கடற்படையிரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும், குறித்த இந்திய மீனவர்கள் பயணித்த நான்கு விசைப் படகுகளும், மீன்பிடிப்பதற்குப் பயண்படுத்தப்பட்ட உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


இவ்வாறு கைது செய்யப்பட்ட 35 மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பிரதேச கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்கள் இன்று (09) மாலை புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


சட்டவிரோதமாக இலங்கை எல்லைக்குள் நுழைந்தமை தொடர்பில் இந்த 35 இந்திய மீனவர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டது.


கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் சார்பில் இந்திய உயர் ஸ்தானிகரின் வேண்டுகோளின் பேரில் சட்டத்தரணி அபுஹர் மொஹமட் அஸ்பர் மன்றில் ஆஜராகியிருந்தார்.


இதன்போது சந்தேக நபர்களான இந்திய மீனவர்கள் 35 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


இதேவேளை, இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை (05) கற்பிட்டியின் வடக்கே குதிரமலைப் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


மேலும் இந்த வருடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இலங்கையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 44 இந்திய மீன்பிடி படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், 322 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.






No comments

note