21 வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற அஷ்ஷெய்க் பஸ்லுல் பாரிஸ்-நளீமி- ஆசிரியருக்கு பிரியாவிடை
புத்தளம் - சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் ( நளீமி,MA) கடந்த 2024.08.21 ஆம் திகதியன்று இலங்கை ஆசிரியர் சேவையிலிருந்து முன்பணி நிறைவில் (Early Retirement) ஓய்வு பெற்று செல்வதனை முன்னிட்டு பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.மிஹ்ளார் (நளீமி) தலைமையில் பிரியாவிடை நிகழ்வு புதன்கிழமை (21) பாடசாலை வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பள்ளி நிர்வாக சபைத் தலைவர் ஆகியோரின் பங்கேற்புடன் மாணவச் செல்வங்களின் அமோக வரவேற்புடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் தலைமையுரை நிகழ்த்திய அதிபர் குறித்த ஆசிரியரின் 21 வருட சேவைக் கால அனுபவம் தொடர்பாகவும், அவரது, திறமைகள், ஆளுமை பண்புகள்,சமய, சன்மார்க்க, சமூக, பாடசாலை கற்றல், கற்பித்தல், நிர்வாக பங்களிப்புகள், உயர் கல்வி அடைவுகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களது கவிதை, பாடல் நிகழ்ச்சிகளும், ஆசிரியர்களின் அனுபவப் பகிர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் முன் அரச பணி நிறைவில் செல்லும் ஆசிரியர் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி) அவர்களின் கருத்துரை நிகழ்வும் இடம்பெற்றது. அதில் அவர் " ஆசிரிய சேவையின் முக்கியத்துவம் தொடர்பாகவும், மாணவர்களின் கல்வியின் பாலான தேடலின் அவசியம்" தொடர்பாகவும் தெளிவுபடுத்தியதோடு தேவையேற்படும் போது எப்போதும் இப்பாடசாலைக்கு தனது பங்களிப்புகளை வழங்க காத்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் க.பொ.த. (உ/த) பெறுபேற்றில் புத்தளம் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவியும், விடைபெற்றுச் செல்லும் ஆசிரியரின் செல்வப் புதல்வியுமான ஹானிம் பஸ்லுல் பாரிஸ் அவர்களுக்கு பாடசாலை சார்பில் அதிபரால் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, இந்நிகழ்வில் விடைபெற்றுச் செல்லும் ஆசிரியரின் குடும்பத்தினரும் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments