வடமேல் மாகாணத்தில் புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடசாலைகளைத் தெரிவு செய்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
வடமேல் மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை பாடசாலைகளில் நிலைப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் முயற்சியால் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களைப் பொருத்தமான பாடசாலைகளில் நிலைப்படுத்தல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் நீண்ட காலமாக கஷ்டப் பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்கொண்டு செல்வதற்கு வசதியாக ஆசிரியர்களின் நியமனம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்திய ஆளுநர் நஸீர் அஹமட் ஆசிரியர்களுக்கு அசௌகரியமற்ற முறையில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதன் ஊடாக அதனை சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டிய ஆளுநர்
வடமேல் மாகாணத்தில் நிலவும் கணித, விஞ்ஞான, ஆங்கில பாட ஆசிரியர் வெற்றிடங்கள் போன்றே தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் குறித்தும் கூடுதல் கரிசனை காட்டுமாறு ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் வடமேல் மாகாணத்தை கல்வியில் முன்னணி வகிக்கும் மாகாணமாக மேம்படுத்தும் இலக்குடன் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களின் ஒரு அங்கமாக, தற்போதைக்கு சுமார் நான்காயிரத்து இருநூறு (4200) ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆயிரத்து ஐநூறு(1500) ஆசிரியர் நியமனங்களை நிரப்புவதற்கான அனுமதியை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். எனவே மாகாண மட்டத்திலான முழுமையான ஆசிரியர் வெற்றிடங்கள் குறித்த அறிக்கையொன்றை தமக்குச் சமர்ப்பிக்குமாறும் அவர் இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்புதல், ஏனைய வசதிகளை ஏற்படுத்தல் போன்ற கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து முன்னுரிமை அடிப்படையில் செயற்படுமாறு வலியுறுத்தினார்.
மேற்படி சந்திப்பில் மாகாண கல்வி அமைச்சு மற்றும் பிரதான அமைச்சின் செயலாளர் திருமதி நயனா காரியவசம், மாகாணக் கல்விப் பணிப்பாளர் முதிதா ஜயதிலக்க உள்ளிட்ட்டோருடன் வலயக் கல்விப் பணிப்பாளர்களும் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments