Breaking News

இலங்கை கல்வி நிருவாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர்களாக சேவையாற்றி, இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு (SLEAS) உள்வாங்கப்பட்ட ஏ.எம்.ஜவாத் மற்றும் எம். நௌசாத் ஆகியோருக்கான கெளரவிப்பு நிகழ்வொன்று, அண்மையில் (27) புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. 


கல்வி மேம்பாட்டுக்கும் சீர்திருத்தத்துக்குமான புத்தளம் கல்வியியலாளர்களின் மன்றத்தினால் (PILLARS -பில்லர்ஸ்) ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வைபவத்தில், புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஓய்வு நிலை அதிபர்கள், அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உட்பட புத்தளம் நகர ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர், அதன் பிரதிநிதிகள் என பல பிரமுகர்கள் கலந்துகொண்டதுடன் கெளரவிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 


பில்லர்ஸ் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் எக்ஸலன்ஸ் பாடசாலை அதிபருமான ஹிதாயத்துல்லாஹ் அஜ்மல் தலைமையில் இடம்பெற்ற இந்த கெளவிப்பு நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம். ஜவாத், எம். நௌசாத் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. 


கல்விப் புலத்தில்  அவர்களின் கடந்தகால சேவைகளை பில்லர்ஸின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எஸ்.ஏ.சீ.பீ. மரைக்கார் சபையில் நினைவு கூர்ந்தார். 


நிகழ்வின் பிரதான உரையை பில்லர்ஸ் அமைப்பின் தலைவரும், ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பளருமான இஸட். ஏ. ஸன்ஹிர் நிகழ்த்தினார். 


புத்தளம் மாவட்டத்தில்  2500 சதுர கி.மீ. நிலப்பரப்பில் அமைந்துள்ள புத்தளம் கல்வி வலயம், மாவட்டத்தின் 80 சதவீத நிலப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. இக் கல்வி வலயத்தில் 213 பாடசாலைகள் காணப்படுகின்றன. சுமார் 90,000 மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்றனர். 3000 ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். புத்தளம் வலயக் கல்விப் பணிமனையில் மிகக் கடுமையான ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது. இப்பின்னணியில் அதிபர்களும் ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

எனவே புத்தளம் கல்வி வலயம் ஆகக் குறைந்தது மூன்றாகப் பிரிக்கப்படல் வேண்டும் என்ற ஆலோசனை இங்கு முன்வைக்கப்பட்டது.


இந்த கெளரவிப்பு நிகழ்வு  பில்லர்ஸ் அமைப்பின் செயலாளர் எம்.ரி. ரினாஸ் முகம்மத்தின் நன்றியுரையுடனும் துஆப் பிரார்தனையுடனும் இனிதே நிறைவுற்றது.









No comments

note