தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயம் சாதனை.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
2024 ஆம் ஆண்டுக்கான புத்தளம் வலய மட்ட கால்ப்பந்தாட்ட போட்டிகளில் புத்தளம் வெட்டாளை அசன் குத்தூஸ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 16 வயது மற்றும் 18 வயதுக்குட்பட்ட அணிகள் வெற்றியீட்டி மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகள் சாஹிறா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இறுதிப்போட்டியில் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயமும், வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயமும் பலப்பரீட்சை நடாத்தியதில் வெட்டாளை பாடசாலை அணி 01 : 00 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி சம்பியன் ஆனது.
18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகள் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் சாஹிரா தேசிய கல்லூரி அணியும், வெட்டாளை அசன்குத்தூஸ் வித்தியாலய அணியும் பலப்பரீட்சை நடாத்தியதில் 01 : 00 என்ற கோல் கணக்கில் சாஹிரா அணி வெற்றியீட்டி வெட்டாளை பாடசாலை அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
வெட்டாளை பாடசாலையின் 52 வருட வரலாற்றில் இதுவே முதன் முறையாக இரு அணிகள் மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாகும்.
இவ்வெற்றிக்காக உழைத்த பாடசாலையின் முதல்வர் ஏ.ஜே.எம். இல்ஹாம், பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.மொஹிதீன், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எச்.எச்.அம்லக் மொஹமட், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் ஆகியோருக்கு பெற்றோர்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
சென்ற வருடம் நடைபெற்ற போட்டிகளிலும் பாடசாலையின் 16 வயதுக்குட்பட்ட அணியினர் அகில இலங்கை ரீதியாக அதி சிறந்த 08 அணிகளுக்குள் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments