மக்களின் ஆணையின்றி இறைவனால் தெரிவு செய்யப்பட்ட ரனில் விக்கிரமசிங்கவினால் இலங்கை வளர்ச்சியடைந்து வருகின்றது - மணல்தீவு பாடசாலையில் அலி சப்ரி ரஹீம்.
"அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு" எனும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் கருத்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தும் கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று (05) மணல் தீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் அதிபர் A.P. நிக்சன் நொயல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் உரையாற்றும் போது, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு பொருளாதார ரீதியாக மிகவும் வீழ்ச்சி கண்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகிய பொழுது நாட்டை பொறுப்பெடுப்பதற்கு எவரும் முன்வராத சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகிய ரணில் விக்கிரமசிங்கவை இந்நாட்டு தலைவராக இறைவன் தெரிவு செய்யதான். இந்த நாட்டு பொருளாதாரத்தை மீட்டுத்தர முடியும் என்ற நம்பிக்கையுடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அவர் பதவிப்பிரமாணம் பெற்று இரண்டு வருடங்களுக்குள் பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இன்னும் சில ஆண்டுகள் இவர் இந்நாட்டு ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டால் இந்நாட்டை பொருளாதார ரீதியாக மென்மேலும் வளப்படுத்துவார் என்ற நம்பிக்கை இந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன் நாட்டு மக்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் ஜவ்ஷி ஜமால்தீன், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், இணைப்பாளர் என். எம். நிஷாத் மற்றும் ஊடக செயலாளர் எம். எம். நவ்ஃபர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது மணல் தீவு அரசினர் ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
No comments