அரசு எங்களை சாகும் வரையான உண்ணாவிரதத்துக்கு நகர்த்துகிறது.- தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் முகமது காமில்!
நூருல் ஹுதா உமர்
நியாயமான மற்றும் எங்களுக்கு வழங்குவதாக அரசால் வாக்குறுதியளிக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை நிவர்த்திக்குமாறு கோரி நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 50 நாட்களாக போராடிவரும் இன்றைய சூழலில் அரசும் சம்மந்தப்பட்ட நிருவாகிகளும் கண்ணை மூடிக்கொண்டிருப்பது எங்களை சாகும்வரையான உண்ணாவிரதத்துக்குள் தள்ள எத்தனிப்பது போன்று உள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமில் தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 50 நாட்களாக தாங்களது போராட்டங்களை பல்வேறு வியூகங்களை வகுத்து போராடி வரும் நிலையில் தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று 2024.06.19 ஆம் திகதி சுழற்சி முறையான உண்ணாவிரத போராட்டத்தையும் சத்தியாக்கிரக போராட்டத்தயும் பல்கலைக்கழக நுழைவாயிலில் ஆரம்பித்துள்ளனர்.
சுழற்சி முறையான உண்ணாவிரத போராட்டத்தில் முதற்கட்டமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் மற்றும் எஸ். றிபாயுத்தீன், எம்.எச்.எம். நாஸார் ஆகியோர் குதித்துள்ளனர்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஊழியர் சங்கத்தின் செயலாளர் முகமது காமில், நாங்கள் சொகுசு தேவைகளுக்காக போராடவில்லை. எங்களது போராட்டம் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயமான கோரிக்கைக்கான போராட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலவரங்களின் காரணமாக எங்களது ஊழியர்கள் தங்களது வாழ்வை கொண்டுசெல்ல மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
ஊழியர்களின் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகங்கள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன இதனால் மாணவர்களின் கல்விநிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இவைகள் தொடர்பில் அரசாங்கமோ அல்லது மாணவர்களோ கவலைப்பட்டதாக தெரியவில்லை.அவ்வாறு அவர்கள் கவலைப்பட்டிருந்தால் எங்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் கருத்துக்களையாவது வெளியிட்டிருப்பர்.
ஊழியர்கள் போராடிவரும் சூழலில் குறித்த வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தாங்களுக்கு சாதகமான பதில் கிடைக்குமாக இருந்தால் உடனடியாக கடமைக்கு திரும்ப தயாராய் இருப்பதாகவும் இல்லையெனில் நாங்கள் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தை நோக்கியே நகரவேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் மாணவர்களும் பணியாற்றும் எல்லா தரப்பு ஊழியர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதைவிட கவைப்படக்கூடிய ஒன்றாக பல்கலைக்கழகங்களில் காணப்படும் உபகரணங்கள் மற்றும் சூழல் என்பன பராமரிப்பின்றி பழுதடையும் நிலையை எட்டுவதாகவும் இவை எல்லாவற்றியும் அரசு கருத்தில்கொண்டு உடன் தீர்வைத்தர முற்படவேண்டும் என்று தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழினுட்ப உத்தியோகத்தர் ஏ.எல்.எம். பைறோஜி தெரிவித்தார்.
இன்றைய போராட்டத்தின்போதும் சம்பள அதிகரிப்பை வழங்கக் கோரியும் தங்களது பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இங்கு; ஒற்றுமையே பலம், சமத்துவமே எம் தேவை, அரசாங்கமே கண்முளித்துப்பார், 8 வருட ஏமாற்றம் இன்னும் தொடருமா?, வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம், புத்திஜீவிகளை உருவாக்கும் அரச ஊழியர்களாகிய நாங்கள் நடுத்தெருவில் என்பனபோன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.
No comments