பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் சிற்பி ஓய்வு பெறுகின்றார் - ஏ.எச்.பௌசுல் ஆசிரியர்
2013 ஆம் ஆண்டு 63 மாணவர்களுடன் கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றில் இரண்டு ஆசிரியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை இன்று முழுப்பாடசாலையாக சகல வளங்களும் நிறைந்துள்ள நிலையில் புத்தளம் மாவட்டத்தில் ஒரு தலைசிறந்த பாடசாலையாக மிளிர்வதற்கு அதிபர் என்.எம்.எம்.நஜீப் அவர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும்.
அவர் பன்னாளுமை மிக்க அதிபர். மாணவர்களை அன்போடு அழைக்கும் சிறந்த ஆசிரியராகவும், அதிபராகவும், பெற்றோராகவும், நல்ல நண்பனாகவும் செயற்பட்டு மாணவர்களை வழிநடத்துவதில் அவரை யாராலும் மிஞ்சிவிட முடியாது. அவரால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் இன்று ஆன்மீகத் துறையிலும், லௌகீகத் துறையிலும் சிறந்து விளங்குகின்றனர். இதனாலயே அவருடைய பணி ஓய்வு இப்பிரதேசத்திற்கு ஒரு பாரிய இழப்பினை ஏற்படுத்தியுள்ளது . தியாகங்களோடு பணி ஓய்வு வரை பயணித்த அவரின் பின்புலம் பற்றி சுருங்கக் கூற வேண்டுமென நினைக்கின்றேன்.
அவர் சிலாபத்தைச் சேர்ந்த மதார் சாஹிபூ நெய்னா முஹம்மது மற்றும் கார்ச மரைக்கார் உம்மு ரல்ஹா ஆகியோரின் தம்பதிகளுக்கு 1964.06.21 ஆம் திகதி மூன்றாவது பிள்ளையாக பிறந்து ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை (வணிகத்) துறையில் சி/நஸ்ரியா முஸ்லிம் மத்திய கல்லூரியில் பயின்றுள்ளார்.
1985 - 1986 ஆண்டுக்குள் க.பொ.த. உயர் தரப் பரீட்சை எழுதிய பின்னர் பெறுபேறு வரும் வரையில் AUDIT FIRM SARMA & CO யில் AUDIT TRAINER ஆக கடமை புரிந்துள்ளார். பின்னர் 1986 - 1989 ஆம் ஆண்டுகளில் NALEEM HAJIYAR & Co யில் நிதிப் பிரிவில் உதவிப் பரிசோதகராக (ACCOUND CLARK) ஆக கடமையாற்றி 1989.09.01 ஆம் திகதி ஆசிரிய நியமனம் பெற்று முதல் பாடசாலையாக பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தனது பொறுப்புக்களை கடமையேற்றார்.
1990 - 1992 காலப்பகுதியில் ஆசிரியர் பயிற்சிக்காக தொலைக்கல்வி சென்று மீண்டும் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியராக இணைந்து கொண்ட அவர் 1994 ஆம் ஆண்டு அப்பாடசாலையின் பிரதி அதிபராக நியமனம் பெற்று பாடாசாலையின் கனிசமான வளர்ச்சிக்கு தொண்டாற்றிய பெருமை அவரையே சாறும். 1995 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையிலும் அரச மொழிகள் திணைக்களத்தில் சிங்கள மொழி ஊழியர்களுக்கான தமிழ்மொழி வளவாளராக கடமை புரிந்து வருகின்றார்.
2000 - 2002 ஆம் ஆண்டு கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து இடமாற்றம் பெற்று பு/விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தனது ஆசிரியர் கடமையை நிறைவேற்றினார். பின்னர் அங்கிருந்து இடமாற்றம் பெற்று 2002 .05 .20 - 2002.05.22 திகதி வரை, தான்கற்ற பாடசாலையான சி/நஸ்ரியா முஸ்லிம் மத்திய கல்லூரியில் ஆசிரியராக கடமையேற்றார். அப்பாடசாலையில் கடமையாற்றும் போது கடையாமோட்டை பாடசாலையின் பெற்றோர் மற்றும் புத்தளக் கல்விப் பணிப்பாளரின் வற்புறுத்தலுக்கமைய 2002 - 2005 ஆம் ஆண்டுகளில் பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு ஆசிரியராக கடமையேற்று பிரதி அதிபராகவும் கடமை புரிந்துள்ளார். அங்கிருந்து இடமாற்றம் பெற்று 2005 - 2012 காலப்பகுதியில் மீண்டும் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையேற்று தனது பிரதி அதிபர் பணியின் மூலம் பாடசாலையின் வளர்ச்சிப் போக்கில் பங்களிப்பினை செய்துள்ளார்.
கனமூலை முஸ்லிம் வித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமை புரிந்த அவர் 2013.02.13 ஆம் திகதி அதிபர் நியமனம் கிடைக்கப் பெற்று பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் தலைமை பொறுப்புக்களை ஏற்று 2013 - 2024 ஆம் ஆண்டு வரை கடமை புரிந்த அவர் தனது 60 வது வயதில் 2024.06.20 ஆம் திகதி ஓய்வு பெறுகிறார்.
அவர் தன்னை அரச பணியோடு மட்டுப்படுத்திக் கொள்ளாமல் சமூக சேவையிலும் ஈடுபடுத்திக் கொண்டார். 2009 ஆண்டு தொடக்கம் அகில இலங்கை சமாதான நீதவானாகவும், 2010 தொடக்கம் சமூக பொலிஸ் பாதுகாப்புப் பிரிவிலும் (கனமூலை வடக்கு கிராம சேவகர் பிரிவு) தலைவராகவும், 2018 - 2021 காலப்பகுதியில் கனமூலை பெரிய பள்ளிவாயலின் நிர்வாக செயலாளராகவும் கடமை புரிந்துள்ளார்.
ஏ.எச்.பௌசுல்
பாடசாலை உருவாக்கக் குழு உபதலைவர், ஆசிரியர் -
பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)
No comments