ஓய்வு பெறுவார் அவரா?
நஜீப் சேரை எங்கு முதலில் சந்தித்தேன்? என்ன கதைத்துக் கொண்டோம் என்று எனக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவர் கனமூலை பாடசாலைக்கு நியமனம் பெற்று வருகின்றபோது நான் ஆண்டு 8இல் (1989) கொத்தாந்தீவு மு.ம.வி கல்வி பயிலும் காலம். அவரைப் பற்றிய செய்திகள் அவரது மாணவர்கள் மூலம் ஊரில் பரவத் தொடங்குகிறது. பாடசாலை பற்றிய நம்பிக்கை சமூகத்தில் மெல்ல மெல்ல கட்டியெழுப்பப்படுகிறது. அதன் பின்னணியில் நஜீப் சேரின் பங்கும் மகத்தானது. பிற்காலத்தில் அவருடன் இணைந்து ஆசிரியப் பணியில் ஈடுபடும் வாய்ப்பை பெற்றேன். சன்மார்க்க, சமூகப் பணிகளில் இன்று வரை இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.
நஜீப் சேர் மாணவர் மனம் வென்ற ஆசான்; அவரது பேச்சு, உடல் மொழி, நடிதிறன் என்பன மாணவர்களை வகுப்பறையில் அப்படியே கட்டிவைத்திருக்கும். அவர் ஒரு கலைஞன்; ஒரு கவிஞன்; ஒரு பாடலாசிரியன்; நிமிடத்தில் நாடகமொன்றை அறங்கில் காட்சிப்படுத்தும் நாடகத் தயாரிப்பாளன். ஓர் அறிவிப்பாளன்; பிரச்சினைகளை கையாள்வதில் தனியான மந்திரக்கோலை சுமந்திருந்த அற்புத வித்தைக்காரன். எப்படி இந்தப் பிரச்சினையை சமாளிக்கப் போகிறார்கள் என்று எண்ணும் வேளையில் அவர் அப்பிரச்சினையை முடித்திருப்பார். மகுடிக்கு மயங்கும் நாகம் போல சீறி வந்தவர்கள் அவரது வார்த்தை பெட்டிக்குள் அடங்கி கிடப்பார்கள். பாடசாலையையும் சமூகத்தையும் இணைப்பதில் வலுவான இணைப்புப் பாலமாக எப்போதும் செயற்படுபவர்.
நஜீப் சேர், ஒரு தனித்துவமான முயற்சியாளன். பொதுவாக ஆசிரியப் பணிக்கு வந்தவர்கள் இறுதியாக கற்றது அவர்களது நியமனத்திற்கு முந்திய தினமாக இருக்கும். ஆனால் நியமனத்தின் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார். பட்டப் பின் கல்வி டிப்ளோமாவையும் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்தார். இவை எதுவும் அவரது சம்பள உயர்வுக்கு அவசியமற்றது. தான் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராக இருந்தும் நெருக்கடி மிக்க பொருளாதார நிலைமையிலும் இப்பட்டப்படிப்புகளை மேற்கொண்டார் என்பது கற்றலில் கரிசனையற்ற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாகும். இவர் தன்னை வளர்த்துக்கொள்ள எடுத்த முயற்சியின் காரணமாக இலங்கை அரசகரும மொழிகள் திணைக்கள வளவாளராக இணைந்து பின்னர் பணிப்பாளர் சபை அங்கத்துவத்தையும் பெற்றுக்கொண்டார்.
நஜீப் சேர், சமூக மாற்றமும் சமூகத்திற்கான வாய்ப்புகளும் கல்வியினூடாகவே சாத்தியம் என உறுதியாக நம்புபவர். தனது உரைகளிலும் உரையாடல்களிலும் இதனை அழுத்திப் பேசுவதை அவதானித்திருக்கின்றேன். கற்பதை ஊக்குவிப்பார்; கற்றுத் தேருவோரை பாராட்டுவார்; தட்டிக்கொடுப்பார். கற்றோரின் மூலம் சமூகம் பயனடைய வேண்டும் என்பதை எப்போதும் சிந்தித்தித்துக்கொண்டிருப்பார். அதற்கான களத்தை தேடுவார், உருவாக்குவார்.
நஜீப் சேர், மாணவ சமூகத்தினதும் ஆசிரியப் பணிக் குழுவினதும் நலனில் அக்கறை கொண்டவர். மாணவர்களுக்கு அல்லது ஆசிரியர்களுக்கு தேவைகள் வரும்போது உதவுவார்; ஆறுதல் அளிப்பார்; தன்னால் முடியுமான ஏதாவதொன்றை செய்வதில் முனைப்பாக இருப்பார்.
நஜீப் சேர், அநியாயங்களுக்கு எதிரானவர்; ஊழல் மோசடிகளுக்கு எதிரானவர். அவருடன் இணைந்து பணியாற்றிய காலங்களில் கண்ட உதாரணங்கள் பல. தனது மாணவர்களின் மேலதிக, மாலை நேர வகுப்பை குறிப்பிட முடியும். அவர் தான் கற்பிக்கும் பாடசாலையின் மாணவர்களிடம் ஒருபோதும் கைநீட்டி தன் கையை வாங்கும் கீழ்க் கையாக வைத்திருக்கவில்லை. எங்காவது மோசடிகள் இடம்பெறுவதை விளங்கினால் அதனை கவனமாக தடுத்து நிறுத்தி விடுவார். தவணைப் பரீட்சைகள், டை (Tie), பெட்ச் போன்றவைகளில் வரும் சிறிய இலாபங்களும் மாணவர்களின் நலனுக்கு பயன்பட வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருப்பார். பாடசாலை நிகழ்வுகளின் கணக்கறிக்கைகளில் உன்னிப்பாக கவனம் செலுத்துவார். பாடசாலையின் தேவைகளுக்காக கோட்ட, வலய பணிமனைகளுக்கு செல்லும் போதெல்லாம் தனது செலவிலேயே சென்று கருமங்கள் புரிவார். இவை ஆசிரியக் குழாத்திற்கான பின்பற்றத்தகு அடிச்சுவடுகள்.
நஜீப் சேரின் ஆசிரியப் பணியின் வரலாறு முழுவதும் தங்கத்தால் எழுதப்பட வேண்டியவை. அந்த வரலாற்றின் மணிமகுடமாய் அமைந்ததுதான் நல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலை. மிகப் பழமையான கட்டடமும் 70இற்கும் குறைவான மாணவர்களும் ஆசிரியருமாக தொடங்கப்பட்ட பாடசாலையின் ஸ்தாபக அதிபராகி ஒரு தசாப்த காலத்திற்குள் புத்தளம் கல்வி வலயத்தில் மெச்சிப் பாராட்டப்படுகின்ற அளவில் உச்சிவானை தொட வைத்த அதிசயத்தை நிகழ்த்திவிட்டு அப்பாடசாலையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
ஒரு பாடசாலையின் வெற்றி அப்பாடசாலை அதிபரின் கொள்திறனில் தங்கியிருக்கிறது. அவரிடமிருந்த அறிவு, தொடர் கற்றல், தன்னை தகவமைத்துக் கொள்ள எடுத்த முயற்சி, ஆசிரியர்கள், மாணவர்கள், சமூகம் என எல்லோரையும் இணைத்து பாடசாலை பயணிக்க வேண்டிய திசையில் நகர்த்தும் அரவணைத்துச் செல்லும் தலைமைத்துவ ஆற்றல் நல்லந்தழுவ ஆரம்பப் பாடசாலைக்கு கீர்த்தி மிக்க வரலாற்றைப் பதியவைத்திருக்கிறது.
நஜீப் சேர், பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அதிபராக இராது கற்றல் கலாசாரத்தை உருவாக்கும் அதிபராக செயற்பட்டார் என்றால் அது மிகையாகாது.
இவை அனைத்தும் நஜீப் சேர் பற்றியதாகும். நஜீப் சேருக்குரியவையும் இங்குண்டு. நஜீப் சேரின் பன்முக ஆளுமைத் திறன் இன்னும் விரிந்த பரப்பில் சேவை வழங்கும் வல்லமை கொண்டது. பொதுவாக சமூகத்தின் பல்வேறு தளங்களில் தனது பங்களிப்பை அவர் வழங்க வேண்டும்; குறிப்பாக சிங்களம், முஸ்லிம் உறவை கட்டியெழுப்புவதற்கான எல்லாவகையான ஆற்றல்களும் அவரிடம் நிறைந்து கிடக்கின்றன. தனது பணி ஓய்வு காலத்தை இனநல்லுறவை புத்தளம் மாவட்ட எல்லைக்குள்ளேனும் கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்த அவர் தீர்மானிக்க வேண்டும். அது சமூகத்திற்கும் தேசத்திற்கும் ஆற்றும் மகத்தான பங்களிப்பாக வரலாறு நிச்சயம் பதிவு செய்யும்.
அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.,எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி)
ஆசிரியர் பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயம்
No comments