Breaking News

பலஸ்தீன அன்புறவுகளுக்காக பிரார்த்திப்போம்; கல்முனை முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர்

(சாய்ந்தமருது செய்தியாளர்)

இன்றைய ஈகைத்திருநாளில் பலஸ்தீன அன்புறவுகளுக்காக துஆ செய்யும் அதேவேளை இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை நிலைபெறவும் பிரார்த்திப்போம் என்று கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளருமான ரஹ்மத் மன்சூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;


நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களினதும், அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும் தியாகங்களை நினைவுபடுத்தும் முகமாக அல்லாஹ் இத்திருநாளை அருளியுள்ளான்.


அக்குடும்பத்தினரின் தியாகங்கள் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும். தனிமனிதர்களின், குடும்பங்களின் மற்றும் சமூகங்களின் தியாகங்கள் மூலமே வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும்.


அவ்வாறான நிலையில், பலஸ்தீனில் எமது அன்புறவுகள் கண்ணீர் சிந்துகின்றன. உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. அவர்களின் இலட்சியப் பயணம் வெற்றி அடைவதற்கும், சாந்தி, சமாதானம் விரைவில் மலரும் நாம் அனைவரும் துஆக்களைச் செய்வோமாக.


அதேவேளை இஸ்லாம் தியாகங்களின் ஊடாகவே வாழ்வில் வெற்றி அடைய முடியுமென்பதைப் போதிக்கின்றது. அந்த வகையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாட்டினதும் சமூகத்தினதும் நன்மைக்காக தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் அர்ப்பணிப்புடன் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.


மேலும், எமது நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் சமாதானமும் ஐக்கியமும் மலர வல்ல இறைவன் துணை புரிய வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகள் நீங்கி, சுபீட்சமான வாழ்வு மலர வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.




No comments

note