ஆசிரியர்களின் பிரச்சினைகளை நாட்டை நிர்வகிப்பவன் புரிந்து கொள்ளவில்லை என்றால் அவன் நாட்டை ஆள தகுதியற்றவனாகும் : எஸ்.எம்.சபீஸ்
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஆசிரியர்களுக்கே அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது. இது மறைமுகமாக உணர்த்தும் செய்தி என்னவென்றால் ஆசிரியர்கள் தான் ஒரு நாடு அபிவிருத்தி அடைய, அடைந்த அபிவிருத்தியை தக்க வைக்க பிரதான காரணியாக திகழ்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இதனால் ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும் என அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம் சபீஸ் விடுத்துள்ள தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும், இன்று நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியால் ஆசிரியர்கள் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்ய இன்னொரு தொழிலை செய்ய வேண்டி ஏற்படுகிறது. அவ்வாறான ஓர் நிலை ஏற்பட்டால் பகல் எல்லாம் தொண்டை நோக 40 மாணவர்களுக்கு பாடம் எடுத்து விட்டு மறுநாள் மாணவர்களுக்கு தேவையான கற்பித்தல் தொடர்பான ஏற்பாடுகளை செய்வதற்கு ஆசிரியர்களுக்கு போதுமான நேரம் கிடைக்காமல் போய்விடும். இது ஒரு நாட்டை உயர்த்திட ஒருநாளும் உதவாது.
அதனால் ஆசிரியர்களுக்கு உயர்வான சம்பளம் வழங்குவது என்பது அவசியமானதொன்றாகும். இதனை ஒருநாட்டை நிருவகிப்பவன் புரிந்து கொள்ளவில்லை என்றால் அவன் நாட்டை ஆள தகுதியற்றவனாகும்.
அதே நேரம் நமது கல்விமுறை ஏட்டுச்சுரக்காய் போன்றே காணப்படுகின்றது. அதில் இப்போது சிறு சிறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும் அதிரடி மாற்றங்களின் மூலம் மனன கல்வியில் இருந்து நடைமுறை மற்றும் உற்பத்தி பொருளாதார கல்விக்கு நாம் மாற வேண்டும். அதற்குரிய ஆசிரியர்களையும் அரசு தயார்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயமும் கூட என மேலும் தெரிவித்துள்ளார்.
No comments