பலஸ்தீன் விடுதலைக்காக பிரார்த்திப்போம்; முன்னாள் முதல்வர் ஏ.எம்.றகீப்
(சாய்ந்தமருது செய்தியாளர்)
உலக முஸ்லிம்களின் நிம்மதி, சந்தோசத்திற்காகவும் பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காகவும் நாட்டின் பொருளாதார மீட்சிக்காகவும் இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம் என்று கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறானதோர் இக்கட்டான சூழ்நிலையிலேயே இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகின்றோம்.
ஹஜ் என்பது தியாகம், சகிப்புத்தன்மை, சமத்துவம், சகவாழ்வு, பிறருக்கு உதவுதல் போன்றவற்றை எமக்கு கற்றுத்தருகின்ற ஒரு மேன்மைமிகு வணக்கமாகும். மேலும், இறைவனின் அன்பையும் நெருக்கத்தையும் அடைந்து, பாவ மீட்சியை பெற்றுத்தருகின்ற ஓர் உன்னத வணக்கமுமாகும். இன்று நாம் எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்சினைகள், நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான ஒரே வழி இறைவனின்பால் மீள்வதாகும்.
இஸ்லாமிய உலகின் முதல் கிப்லாவான பைத்துஸ் முகத்தஸ் - மஸ்ஜில் அக்ஸா எனும் புனிதஸ்தலம் அமையப் பெற்றுள்ள பலஸ்தீன் தேசமானது இன வெறியர்களால் அழிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள மக்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர். இந்த அட்டூழியங்கள் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காக இருகரமேந்தி வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து இஸ்லாமிய நெஞ்சங்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
No comments