உயர்தரம் வரையான தொடர்ச்சியான கல்வி வாய்ப்பு, கல்வித் துறையின் புதிய புரட்சியொன்றுக்கான அடித்தளம் – ஆளுனர் நஸீர் அஹமட் வலியுறுத்தல்.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவின் பிரகாரம், கல்வி அமைச்சின் கொள்கைத் தீர்மானத்துக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் 2023 ம் ஆண்டின் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களை நேரடியாக உயர்தர வகுப்புகளில் இணைத்துக் கொள்ளும் தேசிய நிகழ்வு செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்றது.
அதற்கு சமாந்தரமாக வடமேல் மாகாண நிகழ்வு, ஆளுனர் நஸீர் அஹமட் தலைமையில் குருநாகல் கல்வி வலயத்துக்குட்பட்ட உடபதலவ சுதர்சன மகா வித்தியாலயத்தில் (04) காலை நடைபெற்றது.
மாகாண முதலமைச்சு மற்றும் மாகாண கல்வி அமைச்சு என்பன ஒன்றிணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுனர் நஸீர் அஹமட்,
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடு பெரும் பொருளாதாரச் சரிவில் சிக்கியதன் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டு, பாடப்புத்தகங்கள் தட்டுப்பாடு, சீருடைகளுக்குத் தட்டுப்பாடு போன்ற நெருக்கடிகள் காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்பட்டிருந்த நிலைமையை மாற்றி, இன்றைய நிலைக்குக் கொண்டு வருவதில் நாட்டைக் கட்டி எழுப்பியவர் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தான் என்றும், அன்னாரின் எண்ணக்கருவின் பிரகாரம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை நேரடியாக உயர்தர வகுப்புகளுக்கு இணைத்து தொடர்ச்சியாக கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியமையானது பெரும் கல்விப் புரட்சியொன்றுக்கான அடித்தளத்தை இட்டுள்ளதாகவும், சுட்டிக்காட்டினார்.
பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகும் வரை மாதக்கணக்கில் வெறுமனே காலத்தை விரயமாக்கிக்கொண்டிருக்கும் நிலையை மாற்றி, உயர்தரம் வரை தொடர்ச்சியாக கல்விக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ள ஜனாதிபதியின் எண்ணக்கருவின் அடிப்படையிலான செயற்பாட்டை சிறந்த முறையில் பயன்படுத்தி, மாகாணத்தினுள் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், போன்றோர் மட்டுமன்றி நிகழ்கால உலகின் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் விற்பன்னர்கள் உருவாக வேண்டும் என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட்தொடர்ந்தும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் மாகாண முதலமைச்சு , மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நயனா காரியவசம், மாகாண கல்விப் பணிப்பாளர் முதிதா ஜயதிலக , குருநாகல் மாவட்ட கல்விப் பணிப்பாளர் புஷ்பமாலா ஜயமஹ, வடமேல் மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் துமிந்தா வேதண்ட , பிரதான அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் ரசிகா அலவத்தே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
No comments