Breaking News

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆளுனர் நஸீர் அஹமட் கண்காணிப்பு விஜயம்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில், குளியாப்பிட்டிய கிழக்கு பிரதேச செயலகப் பிரிவின் ஹொரோம்பாவ, மெடிவலகெதர பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 64 வீடுகள் கடுமையாக சேதமுற்றிருந்தன.


204 குடும்பங்கள் இதன் காரணமாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். நானூறுக்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து வீழ்ந்து, வீதிகள் மற்றும் வீடுகளில் பாரிய சேதங்களை ஏற்படுத்தி இருந்தன.


இந்நிலையில் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆறுதல் கூறவும், நிலைமைகளை நேரில் அவதானித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும்,  வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் நேரில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.


இதன்போது மெடிவலகெதர பிரதேசத்தில் வீதிகளில் வீழ்ந்து கிடந்த பாரிய மரங்களை உடனடியாக வெட்டி அகற்றி, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறும், பிரதேசத்தில் துண்டிக்கப்பட்டுள்ள மின் விநியோகத்தை துரித கதியில் சீரமைக்குமாறும்  ஆளுனர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


சேதமடைந்திருந்த வீடுகள், பாதிக்கப்பட்ட மக்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோரை நேரில் பார்வையிட்டு, ஆறுதல் கூறிய ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட், மீட்பு மற்றும் புனருத்தாபன நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 


பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், அவர்களின் கல்வி நடவடிக்கைகளை துரித கதியில் மீள ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.


சூறாவளி காரணமாக பாதிப்புற்றிருந்த மெடிவலகெதர ஜும்ஆப் பள்ளிவாசலையும் பார்வையிட்டு,  பள்ளிவாசலின் இமாம் மற்றும் நிர்வாக சபையினரிடம் சேத விபரங்களைக் கேட்டறிந்து கொண்டார். 


பிரதேசத்தில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு பள்ளிவாசல் ஊடாக இலவசமாக சமைத்த உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை குறித்து இதன்போது ஆளுனர் நஸீர் அஹமட் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.


குறித்த கண்காணிப்பு விஜயத்தின் போது குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத், மெடிவலகெதர  சிவில் சமூக அமைப்புகளின் சார்பில் ரஷீர், இஸ்ஸதீன், குளியாப்பிட்டிய கிழக்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.












No comments

note