Breaking News

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் மாணவர் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு

 (புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியா ஜ்)

"முஸ்லிம், இந்து, பௌத்தம், கிறிஸ்தவம் என்ற சொற் பதங்கள் இல்லாத பொதுவான பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுமானால் அதுவே இந்த நாட்டு மக்களின் ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் வளர்க்கக்கூடியதாக ஒரு சிறந்த கல்வி திட்டமாக அமையவே நாம் எதிர்பார்க்கின்றோம்" என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன தெரிவித்தார்.


புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் 2024 ம் ஆண்டுக்கான புதிய மாணவர் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு அண்மையில் (03) பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


அதிபர் ஏ.எம்.ஜவாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அதிபர் ஏ.எம். ஜவாத் தனது தலைமை உரையில்,


பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன  எமது பாடசாலைக்கு மைதான அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.

கொவிட் தாக்கத்தால் அது தடைபட்டு போனாலும் தற்போது அரசாங்கம் வழங்கிய நிதியிலிருந்து உள்ளக வீதி அபிருத்திக்காக எட்டு இலட்சம் ரூபாய் ஒதுக்கி தந்தமைக்காக பாடசாலை அபிவிருத்திச் சங்கம், ஆசிரியர்கள், மாணவர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


பாராளுமன்ற உறுப்பினர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,


ஆரம்ப காலங்களில் பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் சாகிரா, இந்து, ஆனந்தா, சென்மேரிஸ் ஆகிய பாடசாலைகளில் விளையாட்டு வீரர்கள் ஒன்றாக சந்தித்து விளையாட்டு போட்டிகளில் பங்குபற்ற கூடிய வாய்ப்புகள் கிடைத்தது. 


இன்றைய சூழ்நிலையில் அவ்வாறான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே கிடைக்கின்றது. 


எதிர்காலத்தில் அரசாங்கத்தால் எனக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து இந்த பாடசாலையின் அபிவிருத்திக்காக மேலும் நிதியை ஒதுக்கி தருவதாக தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.


அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதி ஒன்றும் அதிபரினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கி வைக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட மேலதிக நீதவான் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.இக்பால், சாஹிரா தேசிய பாடசாலை அதிபர்ஐ.ஏ.நஜீம், பாலாவி முஸ்லிம் வித்தியாலய அதிபர் நவ்ஷாத், புத்தளம் கல்வி வலயத்தின் சித்திரப்பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.முஹம்மது, பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்று குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.







No comments

note