Breaking News

புத்தளத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பு, புத்தளம் பிரதேச செயலகம் மற்றும் எடியு மயின்ட்ஸ் அணியினர் ஆகியோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த 2024 ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான இலவசமான வழிகாட்டல் செயலமர்வு (30) புத்தளம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்விலே புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட பல்வேறு பாடசாலைகளில் இருந்து  மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பிரயோசனம் அடைந்தார்கள். 


சுய பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் புத்தளம் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எம். அஸ்மில் வரவேற்புரையை நிகழ்த்தினார்.


வளவாளர்களில் ஒருவரான புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் தலைவரும், வவுனியா பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் சிறப்பு பட்டத்தை பயின்று கொண்டிருப்பவரும், தேசிய தொழில் வழிகாட்டல் பாட நெறியை தொடர்ந்து கொண்டிருப்பவருமான எம்.ஆர்.எம். ஷவ்வாப் மாணவர்களுக்கான ஊக்கப்படுத்தல் நிகழ்ச்சிதனை வழங்கினார்.


பிரதான வளவாளரும், புத்தளம் பிரதேச செயலகத்தின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.ஏ. எம். பர்ராஜ், சைக்கோ மெட்ரிக் டெஸ்ட் மூலம் எவ்வாறு துறைகளைக் கண்டறிவது மற்றும் பாடங்களை தெரிவு செய்வது போன்ற முக்கிய எண்ணக் கருவை மாணவர்களுக்கு வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பில் அங்கத்துவம் வகித்து  பல்கலைக்கழகங்களில் வர்த்தகம், கலை, தொழில்நுட்பம், விஞ்ஞான மற்றும் கணித பிரிவுகளில் துறைசார் அடைவுகளை அடைந்தவர்கள் மூலம் துறைகள் சம்பந்தமாக விளக்கமளிக்கப்பட்டன.


வர்த்தக துறையை புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினரும், புத்தளம் திறந்த பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளருமான செல்வி.ரப்பத் வழங்கியதோடு, கலைத்துறை தொடர்பான விளக்கத்தை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை நெறிகள்  மாணவன் செல்வன். ஹனீஸ் அளித்ததுடன், தொழில்நுட்பத் துறை தொடர்பான விளக்கத்தை இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த இலத்திரனியல் பொறியியல் துறையில் பயிலும் மாணவன் செல்வன் நபீஸ் வழங்கினர்.


விஞ்ஞானம் மற்றும் கணிதத்துறை தொடர்பாக புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போதைய ஆலோசனைக் குழு உறுப்பினருமாகிய செல்வன்.ஹூபைப் விளக்கம் அளித்தார். 


இந்த நிகழ்வின் ஏற்பாடுகளின் போது புத்தளம் பிரதேச செயலகத்தின் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ரைசா பர்வீன் பங்களித்திருந்தார். நிகழ்வின் பூரண அனுசரணையாளர்களாக எடியு மயின்ட்ஸ் நிறுவனத்தினர் செயல்பட்டனர்.


நிகழ்வில் புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் பல்வேறு அங்கத்தவர்கள் கலந்து கொண்டதுடன் இந்த நிகழ்வு சிறப்பு பெற உதவினர்.










No comments

note