யுத்தத்தில் இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் விடயத்தில் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும் - அனைத்து சமூகங்களிடத்திலும் கருஜயசூரிய கோரிக்கை
யுத்த காலத்தில் இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் விடயத்தில் ஒட்டுமொத்த சமூகமும் உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டியுள்ளது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யுத்த காலகட்டத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல்போன இலங்கை பிரஜைகளை நினைவுகூர்ந்து மூதூரில் கஞ்சி வழங்குவதற்கு செய்திருந்த ஏற்பாடுகளுக்கு அரச அதிகாரிகள் எதிர்வினை ஆற்றியிருப்பது தொடர்பில் நாம் மிகுந்த வருத்தம் அடைகின்றோம்.
தமக்கு நெருக்கமானவர்களின் மரணம் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றி பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு இருக்கும் மனவேதனையை நாம் ஒரு சமூகம் என்ற வகையில் உணர்வுபூர்வமாக புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், இந்த நாட்டை இருண்ட யுகத்துக்குள் கொண்டுசெல்லாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பது ஒட்டுமொத்த சமுதாயத்தினரதும் பொறுப்பாகும்.
அதற்கமைய அரச அதிகாரிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூகமும் இது போன்ற சூழ்நிலைகளின்போது நாட்டின் பொது நலனை முதன்மையாக கருதி செயல்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எமது நாட்டை மீண்டும் இருளில் தள்ளுவதற்கு அதுவே காரணமாக அமையக்கூடும்.
ஆகையால், சமூக நீதிக்கான தேசிய இயக்கம் என்ற வகையில், நாம் கடந்த காலங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற பல்வேறு துர்பாக்கிய சம்பவங்களினால் உயிரிழந்த மற்றும் காணாமல் போன அனைவரை எண்ணியும் மிகுந்த மன வேதனை அடைகின்றோம்.
மீண்டும் இதுபோன்ற சூழல்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும், அவர்கள் அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து தரப்புகளிடத்திலும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.
- நன்றி - வீரகேசரி -
No comments