Breaking News

உலக ஊடக சுதந்திர தினம் இன்று

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

உலக ஊடக சுதந்திர தினமானது ஒவ்வொரு வருடமும் மே மாதம் 3ஆம் திகதி கடைபிடிக்கப்படுகிறது.


1991ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் 26ஆவது பொதுக் கூட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்ட "உலகின் சகல பிராந்தியங்களுக்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டு சுதந்திரத்துக்கானதும், ஊடக சுதந்திரத்தினதும் பாதுகாப்புக்கும் மேம்படுத்தலுக்குமான ஆணை" என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக இத்தினம் உருவானது.


1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 3ஆம் திகதி "சர்வதேச பத்திரிகை சுதந்திர தினமாக" பிரகடனப்படுத்தப்பட்டது.


கொலம்பிய பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவர் 1986ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி அவரது அலுவலகம் முன்பாக வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரது படுகொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு உலகம் முழுவதும் வலுப்பெற்றது.


இவரின் நினைவாக இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காக பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக ஊடக சுதந்திர விருது வழங்கி கௌரவிக்கின்றனர்.


இந்த வருடம் 31வது உலக ஊடக சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது.  


இந்த வருடத்துக்கான இந்த தினத்தின் கருப்பொருளாக அமைவது "கிரகத்துக்கான ஒரு பத்திரிகை : உலக சுற்றுச்சூழல் நெருக்கடிகளின் மத்தியில் ஊடகவியல் துறை" என்பதாகும்.


ஊடகச் சுதந்திரத்தின் அடிப்படை கொள்கைகளை மேம்படுத்துவதுவும், உலகளாவிய ரீதியில் ஊடகச் சுதந்திரம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்வதுவும், ஊடகவியலாளர்களின் சுதந்திரத் தன்மையின் மீது ஏற்படுகின்ற தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதுவும், தமது கடமையின் பொழுது மரணித்த ஊடகவியலாளர்களுக்கு மரியாதை செலுத்துவதுவும், இத்தினத்தின் முக்கிய நோக்கங்களாகும்.


அரசியல், பொருளாதார, சமூக, கலாசார,  பாதுகாப்பு, மனித உரிமைகள், சமூக விடயங்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகளை எந்தவித தயக்கமும் இன்றி, சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் சுதந்திரமாக பிரசுரிப்பது அவசியமாகக் கருதப்படுகின்றது.


பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு ஊடாக நிதர்சனமான உண்மைகளையும், யதார்த்த நிகழ்வுகளையும், மக்களுக்கு ஆதாரபூர்வமாக அறியத்தரவேண்டியது ஊடகங்களின் தார்மீகப் பொறுப்பாகும்.


அவ்வாறானப் பொறுப்பினை நேர்த்தியாகச் செய்கின்ற தன்மையினையே "ஊடகத் தர்மம்" என்றும் கூறலாம்.


செய்திகளை வெளியிடும் பொழுது அது பக்கச்சார்பற்றதாக இருத்தல் அவசியம்.


இந்த உலகமானது "செய்திகள் சம்பந்தமான யுத்தத்தில்" ஈடுபட்டு கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில், ஓர் ஊடகவியலாளனின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.


இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செய்திகள் மிக வேகமாக பல்வேறு நிறுவனங்களால் பிரசுரிக்கப்படுகின்றன. 


ஆயினும், அவற்றின் மெய்த்தன்மையை ஆய்வு செய்வது கூட ஒரு கடினமான விடயமாகவே தென்படுகின்றது.


யுத்தக் களத்தில் இருந்து செய்திகளை சேகரித்து அனுப்புவது என்பது ஒரு ஊடகவியலாளரின் மிகச் சிரமமான பணியாகும். 


தமது பெறுமதிமிக்க உயிரைத் துச்சமாக மதித்து செய்திகளைச் சேகரிக்கும் அவர்களைப் போற்ற வேண்டியது எமது கடமையாகும்.


சர்வதேச மட்டத்தில் நேர்மையான, உண்மையான, பிரசித்தி பெற்ற ஊடகவியலாளர்கள் கொல்லப்படும்போது அது பெரும் மன வேதனையை அளிக்கின்றது.


2000  - 2022 டிசம்பர் காலப் பகுதியில் சுமார் 1,787 ஊடகவியலாளர்கள் உலகில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 2012, 2013ஆம்  ஆண்டு காலப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.  2012ஆம் ஆண்டு சுமார் 144 ஊடகவியலாளர்களும், 2013ஆம் ஆண்டு சுமார்  142 பேரும் கொல்லப்பட்டிருந்தனர். 


2002 - 2022க்கும் இடையிலான இருபதாண்டுகளில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் 80 வீதமானோர்  சுமார் பதினைந்து நாடுகளை மட்டும் சேர்ந்தவர்கள். 


இவற்றில் அதிக எண்ணிக்கையானவர்கள் ஈராக், சிரியா தேசங்களைச் சார்ந்தவர்கள் ஆவர்.    


இஸ்ரேல் - காஸா யுத்தத்தில், காசாவைச் சேர்ந்த பெருமளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என  ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


உலக பத்திரிகை சுதந்திர தினமானது, பத்திரிகை தணிக்கை, துன்புறுத்தல், மிரட்டல், வன்முறை உட்பட உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் எதிர்கொள்ளும் பல சவால்கள் மற்றும் அச்சுறுத்தல் குறித்து கவனத்தை ஈர்க்கும் ஒரு வாய்ப்பாகும். ஊடக அடக்குமுறை, ஊடகவியலாளர்களுக்கான மிரட்டல், செய்தித் தணிக்கை போன்ற இன்னோரன்ன காரணிகள் அவர்களைச் சுதந்திரமாக செய்திகளைய வெளியிடுவதிலிருந்து தவிர்க்கின்றது. 


சமகால நிகழ்வுகளை எழுதுதல், சூழல் மாசடைதல், அத்துமீறல், ஆக்கிரமிப்புக்கள், மிருகவதை, காடுகளை அழித்தல், சட்ட ரீதியற்ற மணல் அகழ்தல், காலநிலை மாற்றம், போதைவஸ்து பிரச்சினை, கள்ளக் குடியேற்றம், பயங்கரவாதம், மதவாதம், இன முறுகல் போன்ற இன்னோரன்ன அம்சங்களை எழுதுவதில் பத்திரிகையாளர்கள் பல்வேறு சவால்களை எதிர்  நோக்குகின்றனர்.


எமது நாட்டு அரசியல் சாசனத்தில் பேச்சுச் சுதந்திரம், கருத்து தெரிவித்தல் சுதந்திரம்,  தகவலைப் பெற அணுகுவதற்கான உரிமை, ஆகியன தெளிவுறக் கூறப்பட்டுள்ளன.


எவ்வாறு இருந்தாலும் கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்கள் காணாமல் போயிருந்த மையும், மரணித்திருந்தமையும் கடத்தப்பட்டிருந்தமையும் துரதிர்ஷ்டமான சம்பவங்களாகும்.


இன்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது ஒரு விடை காண முடியாத புதிராகவே காணப்படுகின்றது.


இவ்வாறான நிலைப்பாடுகளை இன்றைய காலகட்டத்தில் பல நாடுகளிலும் காணக்கூடியதாக உள்ளது.


இந்த நிலை மாறுவது இன்றைய சூழலில் அவசியமாகும்.


ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை சரிவர நிறைவேற்ற சகல அரசுகளும், பொது நிறுவனங்களும், பொதுமக்களும் தங்களாலான பங்களிப்புக்களை வழங்குவது இன்றியமையாதது என்பது ஒரு வெளிப்படையான உண்மையாகும்.


சரியானத் தகவல்களை வெளிக்கொணரும் சகல ஊடகவியலாளர்களும் பாராட்டப்படக் கூடியவர்களே.  


சகல நாடுகளிலும்  செய்தி சேகரிப்புக்காகச் சென்று உயிர் நீத்த அனைத்து ஊடகவியலாளர்களையும், செய்திகளைப் பிரசுரித்தமைக்காக மரணமடைந்த ஊடகவியலாளர்களையும் இந்த நாளில் நினைவு கூறுவோம்.


"பத்திரிகைகளில் வரும் செய்திகளே வரலாற்றின் முதல் அடித்தளமாகும். 


வரலாறுகள் எழுதப்படுவது நாளாந்தம் நடக்கின்ற செய்திகளின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டதெனக் கூறினால் அது மிகையாகாது . ஒரு நல்ல பத்திரிகையாளன் வரலாற்றுக்குத் தேவையான தகவல்களை சரியாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும், தெளிவாகவும், பயமின்றி, பட்ச பேதமின்றி  எடுத்துக் கூறுவான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை".


பாராளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் ஆகியனவே ஒரு நாட்டின் ஜனநாயக துண்களாக காணப்படுகின்றன. இவற்றுக்கு இணையாக நான்காவது தூணாக ஊடகங்கள் இருப்பதாகவும் கூறப்படுவதுண்டு. இவைகளே மக்களாட்சியை தாங்கி பிடிக்கும் சக்திகள் என வர்ணிப்பர்.


பத்திரிகை சுதந்திரம் தொடர்பாக உலகின் தலைசிறந்த அரசியல்வாதியும், அகிம்ஸாவாதியுமான  மகாத்மா காந்தி குறிப்பிடும் பொழுது, "எந்த ஒரு நாட்டினாலும் கைவிடப்பட முடியாத விலை மதிப்பற்ற தன்மை கொண்டது பத்திரிகை சுதந்திரம்"  என்றார்.


தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா, "ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக காணப்படுவது பத்திரிகை சுதந்திரம்" என்றார். 


அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் எமது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.





No comments

note