வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் குருநாகல் ஆயுர்வேத மருத்துவமனைக்கு அதிரடி விஜயம்
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் (15) குருநாகல் டீ.பி.வெலகெதர ஆயுர்வேத மருத்துவமனைக்கு அதிரடி கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
“குருநாகல் ஆயுர்வேத மருத்துவமனையின் கழிவறைக் கசிவை சீராக்க 90 லட்சம் செலவு” எனும் தலைப்பிலான ஊடக செய்தியொன்றை அடுத்து ஆளுனரின் இந்த அதிரடி கண்காணிப்பு விஜயம் அமைந்திருந்தது.
குறித்த செய்தியின் உண்மைத் தன்மை குறித்து ஆளுனர் நஸீர் அஹமட், டீ.பி.வெலகெதர ஆயுர்வேத மருத்துவமனை நிர்வாகிகளிடம் விபரங்களைக் கேட்டறிந்தார்.
இதன்போது வடமேல் மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூக நலனோம்புகை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை, மகளிர் விவகாரம், சபை அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திருமதி நயனா திசாநாயக்க மற்றும் டீ.பி.வெலகெதர ஆயுர்வேத மருத்துவமனையின் பணிப்பாளர் ஆகியோர் மேற்குறித்த தலைப்பிலான செய்தியுடன் தொடர்புடைய நிர்மாணத்திற்கான உத்தேச செலவின மதிப்பீடு, செலவிடப்பட்ட தொகை என்பன குறித்து ஆளுனருக்கு விளக்கமளித்தனர்.
மேலும் குறித்த நிர்மாணப் பணிகள் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் இதன்போது தெரிய வந்தது.
சர்ச்சைக்குரிய நிர்மாணப் பணிகள் குறித்த சகல விபரங்களையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை உடனடியாகத் தனக்குச் சமர்ப்பிக்குமாறு ஆளுனர் , இதன்போது மாகாண சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளருக்கும், மருத்துவமனைப் பணிப்பாளருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது டீ.பி.வெலகெதர ஆயுர்வேத மருத்துவமனையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து ஆளுனரிடம் அமைச்சின் செயலாளர் மற்றும் மருத்துவமனைப் பணிப்பாளர் ஆகியோர் எடுத்துக் கூறியதுடன், அவற்றைத் தீர்க்க உதவுமாறும் ஆளுனரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தனர்.
ஆயுர்வேத சிகிச்சை முறையை அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கான பிரதான வருமான வழிமுறையொன்றாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை சுட்டிக்காட்டிய ஆளுனர் நஸீர் அஹமட், மருத்துவமனையின் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு மாகாண சபை நிதி, மத்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொடுக்கவும், வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற்றுக்கொடுக்கவும் தன்னாலான பங்களிப்பை வழங்குவதாகத் தெரிவித்தார்.
வடமேல் மாகாணத்தின் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு தான் முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும், அதன் ஒரு கட்டமாக டீ.பி.வெலகெதர ஆயுர்வேத மருத்துவமனையின் குறைபாடுகளை நீக்கவும், மருத்துவமனைக்கு தேவையான நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைத்தல் மற்றும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் சிற்றூழியர் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கவும் தான் நடவடிக்கை மேற்கொள்வதாக ஆளுனர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அதேபோன்று மாகாணத்திற்குள் சுதேச வைத்தியத்துறை மூலம் அந்நியசெலாவணியை ஈட்டத்தக்க புதிய வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுனர் குறிப்பிட்டார்.
அதன் முதற்கட்டமாக எதிர்வரும் வாரத்தில் ஆளுனர் தலைமையில் மாகாணத்தின் சுதேச வைத்தியத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments