Breaking News

புத்தளத்தில் வெள்ளம்; ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் நிவாரணப் பணிகள் தொடர்கிறது...!

ரஸீன் ரஸ்மின்

ஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands Puttalam அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில் முந்தல் பிரதேச செயலகத்திற்குற்பட்ட புபுதுகம கிராம சேவகர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  நேற்றிரவு (23) சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.


புபுதுகம கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட 10 ஆம் கட்டை சிறிமாபுரம் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே இவ்வாறு இரவு நேரத்திற்கான சமைத்த உணவு வழங்கப்பட்டன.


ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான சப்வான் சல்மான் மற்றும் Helping Hands Puttalam அமைப்பின் பணிப்பாளர் எம்.என்.எம். றினோஸ்  ஆகியோர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான சமைத்த உணவுகளை 10 ஆம் கட்டை சிறிமாபுரம் முஹைதீன் ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினரிடம் கையளித்தனர்.


இதன்போது, 10 ஆம் கட்டை சிறிமாபுரம் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 63 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேருக்கு இரவு நேரத்திற்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.


இதனையடுத்து, ஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands Puttalam அமைப்பின் முக்கியஸ்தர்கள், 10 ஆம் கட்டை சிறிமாபுரம் முஹைதீன் ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாக சபையினரை  சந்தித்து குறித்த பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்பிலும், வெள்ள அனர்த்தத்தில் இருந்து கிராம மக்களை பாதுகாப்பது தொடர்பில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இதன்போது கேட்டறித்து கொண்டனர்.


10 ஆம் கட்டை சிறிமாபுரம் முஹைதீன் ஜூம்ஆ மஸ்ஜித் தலைவர் முஜீபுர் ரஹ்மான் , பொருளாளர் முஹம்மது நாசிப் உட்பட மஹல்லாவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


மேலும், சிறிமாபுரம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands Puttalam அமைப்பின் முக்கியஸ்தர்கள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும் சென்று அவர்களின் நிலமைகளையும் கேட்டரிந்தனர்.


இதேவேளை, ஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands Puttalam அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை (20) பாலாவி - முல்லை ஸ்கீம் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களை சேர்ந்த 130 பேருக்கும், நேற்று (22) கற்பிட்டி - முதலைப்பாளி கிராம சேவகர் பிரிவில் உள்ள மதீனாபுரம் மற்றும் கண்டல்குடா ஆகிய பகுதிகளிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 80 குடும்பங்களைச் 370 பேருக்கும் இரவு சமைத்த உணவுப் பொதிகளை வழங்கியுள்ளனர்.


ஐக்கிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து Helping Hands Puttalam அமைப்பினர் புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை இனங்கண்டு தொடர்ச்சியாக சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






No comments

note