Breaking News

சிவப்பு எச்சரிக்கை கடல்கொந்தளிப்பு தொடர்பில் அறிவித்தல்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய தினம் 150 மில்லி மீற்றர் அளவு கனமழை பெய்யும் அதேநேரம் பலத்த காற்றும் வீசுவதோடு கடற்பகுதியில் கொந்தளிப்பு காணப்படும் என்பதனால் மீனவர்கள் உள்ளிட்ட கடல்சார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.


இது தொடர்பான அறிவித்தல் இன்று (23) இரவு 10.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை நாளைய தினம் (24) வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்புள்ளதால் மேற்குறிப்பிட்டோர் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


பின்னர் இது வங்காள விரிகுடாவின் வடகிழக்கு நோக்கி பயணித்து மேலும் அதிகரிக்கக்கூடும். 


அந்த நேரத்தில், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு அரேபிய மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.


மேலும் மேலே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு அறிவிப்பு வரும் வரை கடற்படையினர் மற்றும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது அந்த பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக கரைக்கு வருமாறும், எதிர்வரும் அறிவிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




No comments

note