சீரற்ற காலநிலை; புத்தளம் மாவட்டத்தில் 3499 குடும்பங்களைச் சேர்ந்த 11988 பேர் பாதிப்பு...!
ரஸீன் ரஸ்மின்
கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் அசாதாரண நிலை காரணமாக 3499 குடும்பங்களைச் சேர்ந்த 11988 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 15 பிரதேச செயலகப் பிரிவில் 130 கிராம சேவகர் பிரிவில் 3499 குடும்பங்களை சேர்ந்த 11988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தின் மஹாகும்புக்கடவல, கருவலகஸ்வெவ, மாதம்பை, முந்தல், புத்தளம், சிலாபம், ஆராச்சிக்கட்டுவ, கற்பிட்டி , மஹாவெவ, நவகத்தேகம பல்லம, நாத்தாண்டிய , வென்னப்புவ , தங்கொட்டுவ மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 05 கிராம சேவகர் பிரிவில் 1303 குடும்பங்களைச் சேர்ந்த 4495 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் கூறினார்.
அத்தோடு, வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 57 வீடுகளும், 9 வர்த்தக நிலையமும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளன.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர்.
மாதம்பை, ஆராச்சிக்கட்டுவ மற்றும் நாத்தாண்டிய ஆகிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளிலேயே தலா ஒவ்வொரு மரணம் பதிவாகியுள்ளன.
அத்துடன், நாத்தாண்டிய பகுதியில் இருவரும், ஆராச்சிக்கட்டுவ பகுதியில் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments