வடமேல் மாகாண அமைச்சுகளின் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் - 2024
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
வடமேல் மாகாண அமைச்சுக்களின் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் - 2024 செவ்வாய்க்கிழமை (28) வடமேல் மாகாண ஆளுனரின் அலுவலகத்தில், ஆளுனர் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்றது
வடமேல் மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், சமூக நலனோம்புகை, நன்னடத்தை மற்றும் சிறுவர் விவகாரம், மகளிர் விவகாரம் மற்றும் சபை அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி மீளாய்வு தொடர்பான விவகாரங்கள் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டன.
வடமேல் மாகாணத்தில் உள்ள போதனா மருத்துவமனைகள், ஆதார வைத்தியசாலைகள், பிரதேச சுகாதார பணிமனைகள் உள்ளிட்ட சுகாதாரம், சுதேச மருத்துவமனைகளில் நிலவும் ஆட்பற்றாக்குறை, மாகாண நன்னடத்தை திணைக்களத்தின் சிறுவர் தங்குமிடங்களில் உள்ள குறைபாடுகள், மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்கான தங்குமிட வசதிகள் மேம்படுத்தல், அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளில் மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் நேரடி பங்களிப்பைப்பெற்றுக் கொள்ளல், மற்றும் சமூக நலனோம்புகைத் திணைக்களத்தின் ஊடான பொதுமக்கள் நலனோம்புகை செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கருத்து வெளியிட்ட வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட்,
வடமேல் மாகாணத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைந்து, நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு முன்மாதிரியான மாகாணமாக வடமேல் மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தனது இலக்கு என்று குறிப்பிட்டார்
அத்துடன், பொதுமக்களுக்கான சேவை என்பது அரசாங்க அலுவலர்களின் முதன்மையான கடமை என்று வலியுறுத்திய அவர், மாகாணத்தில் உள்ள அனைத்துத் திணைக்களங்களின் பிரதானிகளும் தத்தமது திணைக்களங்களின் அபிவிருத்திச் செயற்பாடுகளிலும், குறைபாடுகளைக் களைவதிலும் கூடுதல் கரிசனையுடன் செயற்படுமாறு கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஆளுனர்,
அதிகாரிகள் அரசியல் சார்புடன் செயற்படுவதற்குப் பதிலாக பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி செயற்பட வேண்டும் என்றும் , அரசியல் செயற்பாடுகளை அரசியல்வாதிகளுக்கு மேற்கொள்ள இடமளித்து, பொதுமக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளின் போது எந்தவொரு கட்டத்திலும் தனது பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதன் காரணமாக அதிகாரிகள் அந்த விடயத்தில் தயக்கம் கொள்ளத் தேவையில்லை என்றும் வலியுறுத்தினார்.
பொது மக்கள் சேவையின் போது காலங்கடத்தல் மற்றும் கவனயீனம் போன்றவற்றிற்கான தன்னிலை விளக்கத்தை விட பூர்த்தியாக்கப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்களையே தான் அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஆளுனர் நஸீர் அஹமட் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் வடமேல் மாகாண பிரதம செயலாளர் தீபிகா குணரத்தின, ஆளுனரின் செயலாளர் எம். ஐ. இலங்கக்கோன், பிரதிப் பிரதம செயலாளர்களான பிரேம்குமார, ராஜமந்திரி, கீதாஞ்சலி பண்டாரநாயக்க, மற்றும் மாகாண நன்னடத்தை ஆணையாளர் மல்காந்தி பியசேன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
No comments