Breaking News

பலத்த மழை; புத்தளம் மாவட்டத்தில் 19128 பேர் பாதிப்பு...!

 ரஸீன் ரஸ்மின்

கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 4759 குடும்பங்களைச் சேர்ந்த 19,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார்.


நேற்றும் (18) இன்றும் (19)  பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தின் மஹாகும்புக்கடவல, கருவலகஸ்வெவ, மாதம்பை, முந்தல், புத்தளம், சிலாபம் மற்றும் ஆராச்சிக்கட்டுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 11 கிராம சேவகர் பிரிவில் 4582 குடும்பங்களைச் சேர்ந்த 18497 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் கூறினார்.


அத்துடன், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகத்திற்குற்பட்ட 3 கிராம சேவகர் பிரிவில் 66 குடும்பங்களைச் சேர்ந்த 256 பேரும், முந்தல் பிரதேச செயலக பிரிவிக்குற்பட்ட 6 கிராம சேவகர் பிரிவில் 101 குடும்பங்களை சேர்ந்த 343 பேரும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 2 கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களை சேர்ந்த 11 பேரும், கருவலகஸ்வெவ, மாதம்பை மற்றும் சிலாபம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 6 கிராம சேவகர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.


வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 340 குடும்பங்களைச் சேர்ந்த 1140 பேர் நான்கு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், வசதியற்றவர்களுக்கு அந்தந்த பிரதேச பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் பிரதேச செயலக ஊழியர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பில் சுத்தமான குடிநீர், சமைத்த உணவை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


அத்தோடு, கருவலகஸ்வெவ, மாதம்பை மற்றும் புத்தளம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் தலா ஒவ்வொரு வீடுகளும், சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவில் 4 வீடுகளும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன எனவும் அவர் மேலும் கூறினார்.


மேலும் , புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபைகளுக்குற்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொண்டர் அமைப்புக்களும், மஸ்ஜித் நிர்வாகிகளும், சமூக அமைப்பினர்களும் சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றனர்.


இதேவேளை, தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக ராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்  கடமைநேர அதிகாரி தெரிவித்தார்.


இதன்படி இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 2 அடி உயரத்திலும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 3 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளன.


இதனால், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 1050 கன அடி நீரும், அங்கமுவ நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 1800 கன அடி நீரும் வெளியேறுவதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்  கடமைநேர அதிகாரி மேலும் தெரிவித்தார்.




No comments

note