மீண்டும் தேசியத்தில் சான்றிதழ், பணப்பரிசு வென்ற ஓட்டமாவடி யஸீர் அறபாத்
எதிர்கால இலங்கை என்பதை இலக்காகக்கொண்டு "நாளை வெல்லும் இலங்கை" எனும் கருப்பொருளில் டென்னிசன் & வினிதா ரோட்றிகோ அறக்கட்டளை (Tennyson & Vinitha Rodrigo Trust) யினால் தேசிய ரீதியாக மும்மொழிகளிலும் நடாத்தப்பட்ட போட்டியின் வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப லோடஸ் அரங்கில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில், தமிழ்மொழி மூல ஒளிப்பதிவு, கட்டுரைப்போட்டியில் "சமூகத்தின் மத்தியில் நேர்மை, கண்ணியம் மற்றும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தல்" எனும் தலைப்பில் கட்டுரைப்போட்டியில் ஓட்டமாவடியைச்சேந்த இளங்கலைமாணி பட்டதாரி எம்.என்.முஹம்மது யஸீர் அறபாத் முன்றாமிடத்தைப்பிடித்து, சான்றிதழ் மற்றும் 75,000 ரூபா பணப்பரிசையும் பெற்றுக்கொண்டார்.
தமிழ்மொழிப்போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்களின் ஆக்கங்களைப் பரிசீலிக்க ஆரம்பகட்ட நடுவர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டி.அஜந்த குமார், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைபீட விரிவுரையாளர் திரு.சாமிநாதன் விமல், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப்பிரிவின் பணிப்பாளர் வை.எல்.யாகூப், வீரகேசரி பத்திரிகையின் உதவிச்செய்தி ஆசிரியர் திரு.லியோ நிரோசா தர்சன் போன்றவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டவர்களை Google Meet செயலியூடாகப் பரீட்சித்து வெற்றியாளர்களை தெரிவு செய்வதில் இறுதிக்கட்ட நடுவர்களாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் கே.அமிர்தலிங்கம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை பேராசிரியர் முஹம்மட் மாஹீஸ் ஆகியோர் கடமையாற்றினர்.
No comments