மர்ஹூம் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.முனீர் அவர்களது நினைவுகளை சுமந்து வரும் "நினைவுகளில் உஸ்தாத் முனீர்" என்ற புத்தக வெளியீட்டு விழா
(புத்தளம் எம்.யூ.எம். சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹூம் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.முனீர் அவர்களது நினைவுகளை சுமந்து வரும் "நினைவுகளில் உஸ்தாத் முனீர்" என்ற புத்தக வெளியீட்டு விழா 29 ம் திகதி திங்கட்கிழமை இரவு 07 மணிக்கு புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் "அஷ்ஷெய்க் சாமில்" கேட்போர் கூடத்தில் மிக விமரிசையாக இடம்பெற்றது.
புத்தளம் நகர வரலாற்றில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் பங்கேற்ற நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
உஸ்தாத் முனீர் அவர்களின் மறைவையொட்டி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அனுதாப செய்திகளின் தொகுப்பாக இந்த நூல் வெளி வந்துள்ளது.
இந்த நூலினை புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி நிர்வாகம்,கல்வி மேம்பாட்டுக்கும் சீர்திருத்தத்துக்குமான புத்தளம் கல்வியியலாளர்களின் மன்றம் (பில்லர்ஸ்), உஸ்தாத் முனீர் அவர்களது நண்பர்கள் வட்டம் ஆகியன இணைந்து வெளியிட்டு இருந்தன.
நிகழ்வில் வரவேற்பு உரையினை புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் முகாமைத்துவ சபை தலைவர் எச். அஜ்மல் அவர்களும், தலைமை உரையினை பில்லர்ஸ் அமைப்பின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக் கல்வி பணிப்பாளர் இஸட். ஏ.சன்ஹீர் அவர்களும் நிகழ்த்தினர்.
ஆய்வுக்கும் ஆவணப்படுத்தலுக்குமான எம்.ஐ.எம்.மொஹிதீன் நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எழுத்தாளர், ஆய்வாளர் சிறாஜ் மசூர், புத்தளம் கல்விப் பணிமனையின் ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.என்.எம்.எப். ரிஸ்கியா ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர்.
நூலின் முதல் பிரதியை நூலினை வெளியிட்டு வைத்த அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து உஸ்தாத் முனீர் அவர்களின் சகோதரரும், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவருமான அஷ்ஷெய்க் உசைர் (இஸ்லாஹி) அவர்களிடம் வழங்கி வைத்தனர்.
தொடர்ந்து அவரது குடும்ப உறவினர்களாலும், பில்லர்ஸ் அங்கத்தவர்களாலும் வருகை தந்த அதிதிகளுக்கு நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் ஏற்புரையை உஸ்தாத் முனீர் அவர்களின் குடும்ப உறுப்பினர் சட்டத்தரணி பஸ்லுர் ரஹுமான் அவர்களும், குடும்பம் சார்பான சிற்றுரையை அவரது மகள் நஹ்பா சாரா முனீர் அவர்களும், முடிவுரையை மேர்ஸி லங்கா கருத்திட்ட பணிப்பாளர் அஷ்ஷெய்க் முனாஸ் அவர்களும் நன்றி உரையினை பில்லர்ஸ் செயலாளர் டீ.ரினாஸ் முஹம்மது அவர்களும் நிகழ்த்தினர்.
பில்லர்ஸ் அங்கத்தவர் எஸ்.எம்.எம்.மபாஸ் நிகழ்வினை சுவைபட தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் ஓய்வு நிலை பிரதி கல்விப்பணிப்பாளர் இசட். ஏ. சன்ஹீர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, புத்தளம் பதில் நீதவானும், சிரேஷ்ட சட்டத்தரணிமான எம்.எம். இக்பால், புத்தளம் கோட்ட கல்வி பணிப்பாளர் ஏ.அஸ்கா, புத்தளம் முன்னாள் நகர பிதா எம்.என்.எம்.நஸ்மி, புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் எஸ்.நாகராஜா உள்ளிட்ட கல்வியியலாளர்கள், சமூகவியலாளர்கள், நலன் விரும்பிகள், இஸ்லாஹிய்யா மாணவிகள், முனீர் உஸ்தாதின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments