GAFSO வின் மாநாட்டில் இடம்பிடித்த ஓட்டமாவடி யஸீர் அறபாத்தின் கல்குடா காணிப்பிரச்சினை தொடர்பான கட்டுரை
“கல்குடாத்தொகுதியில் காணப்படும் காணி, எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதனூடாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான இன ரீதியான முரண்பாடுகளைக்களைந்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துதல்” எனும் தலைப்பில் ஓட்டமாவடி யஸீர் அறபாத்தினால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரை போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கப்சோ (GAFSO) நிறுவனத்தினால் “சமூகங்களை ஒன்றிணைத்து சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட ஆய்வுக்கட்டுரைப்போட்டியில் கலந்து கொண்ட ஓட்டமாவடியைச்சேர்ந்த இளங்கலைமாணி பட்டதாரி எம்.எம்.முஹம்மது யஸீர் அறபாத் "சமாதானம் மற்றும் முரண்பாட்டுக்கான தீர்வு" எனும் கருப்பொருளில் கல்குடாத்தொகுதியில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் அல்லது இன நல்லிணக்கத்திற்கு தடையாகவிருக்கும் காணி, எல்லைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்” என்ற நோக்கில் சுருக்கமாக தனது ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்திருந்தார்.
குறித்த கட்டுரை தெரிவு செய்யப்பட்டு ஆய்வுச்சுருக்க புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.
இதற்கான சான்றிதழும் பாராட்டும் கடந்த 05.03.2024ம் திகதி கப்சோவின் திட்டப்பணிப்பாளர் எ.ஜே.காமில் இம்டாட் தலைமையில் மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற கப்சோவின் சமாதாம மாநாட்டில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சமூகத்தலைவர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டதோடு, கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கிடையிலான சமாதானம், புரிந்துணர்வு, சகவாழ்வு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுக்கட்டுரைகள், பேச்சுக்கள் என்பன இடம்பெற்றன.
அறிமுகத்தினை அம்பாறை மாவட்ட சமூக ஒருங்கிணைப்பை தொடங்குவதற்கான பிராந்திய தகவல் மையத்தின் ஆலோசகர் கலாநிதி அஸ்லாம் சஜா நிகழ்த்தினார்.
மேலும், இந்நிகழ்வில் கப்சோ நிறுவனத்தின் பணிப்பாளரினால் நிறுவனத்தின் முதலாவது சமாதானத் தலைவர்களுக்கான விருது ஹாஷிம், ஜெனிடா மோகன் (அம்பாறை) மற்றும் ஹிதாயத்துல்லாஹ், (திருகோணமலை ) ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
சிறப்புப்பேச்சாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எ.எம்.எம்.நெளஷாட் கலந்து கொண்டார் .
கௌரவ அதிதிகளாக இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் சிறி வால்ட் ஜப்பானிய தூதுவர் மிஸுகோஷி ஹிடேக்கி, இலங்கைக்கான தென்னாபிரிக்கத்தூதுவர் சண்டில் எட்வின் ஸ்கல்க் ஆகியோரும் அவர்களது செயலாளர்கள், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர், மதத்தலைவர்கள், சமூகத்தலைவரகள், கப்சோவின் இளம் ஊடகவியலாளர்கள், ஊழியர்கள், தொண்டர்கள் எனப்பலரும் கொண்டனர்.
அம்பாறை மாவட்ட வரலாற்றில் முதல் முறையாக மூன்று நாட்டு உயர்ஸ்தானிகள் கலந்து கொண்ட நிகழ்வென்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments