Breaking News

அதிபர் தொண்டமானுக்கு சிலை வைத்து கெளரவிப்பு

புத்தளம், உடப்பு, ஆண்டிமுனைக் கிராமத்தில் அமைத்துள்ளது, ஸ்ரீ கிருஷ்னா ஆரம்ப வித்தியாலயம். பாடசாலைப் பகுப்பாய்வு சுற்று நிருபத்தின் பிரகாரம் இது ஓர் அதி கஷ்டப் பாடசாலையாகும். அதன் முதலாவது அதிபர் திரு கே. தொண்டமான் ஆவார். அவரே அப்பாடசாலையின் தாபகரும் கூட. கடந்த 02.11.2023 அன்று அவர் ஓய்வுபெற்றார்.


கல்வி அமைச்சின் 'ஆயிரம் பாடசாலைகள் வேலைத்திட்டத்தின்' கீழ், ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பப் பிரிவு வேறாக்கப்பட்டு, 'ஸ்ரீ கிருஷ்னா தமிழ் வித்தியாலயம்' என்ற பெயரில் புதிய பாடசாலை உருவாக்கப்பட்டது. 80 * 25 கட்டிடமொன்று அரசால் வழங்கப்பட்டு ஓர் ஆசிரியருடனும் 28 மாணாக்கருடனும் 06.05.2016 இல் இப்பாடசாலை உதயமானது. 'அயல் பாடசாலையே சிறந்த பாடசாலை' என்ற எண்ணக்கருவுக்குள் அது உள்வாங்கப்பட்டது.

இப்பாடசாலையில் தற்போது மொத்தம் நான்கு கட்டிடங்கள் உள்ளன. அத்துடன் இரு Smart வகுப்பறைகளும் ஒரு Smart நூலகமும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றுள், ஆரம்பத்தில் வழங்கப்பட்டது மட்டுமே அரச கட்டிடமாகும்.

பாடசாலை முழுதும் WiFi இணைப்பைப் பெற்ற CCTV கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் அனைத்து ஆசிரியர்களும் பாடசாலைவிட்ட பின்னரும் தமது வகுப்பறைகளையும் பாடசாலையையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. Finger print இயந்திரம், Photo copy இயந்திரங்கள் மூன்று, போன்றனவும் உள்ளன. இவையெல்லாம் அதிபர் தொண்டைமானின் பெரும் முயற்சியின் பலனாகப் பெறப்பட்டவையாகும்.

பாடசாலை சுற்றுச் சூழலை சிறப்பாகப் பேணுவதில் அதிபர் தொண்டமான் கூடிய கவனம் செலுத்தினார். பாடசாலையைச் சூழ பழமரங்கள் நாட்டப்பட்டுள்ளன. மாணவர்கள் பழங்களை களவில் பறிப்பதற்கு மாறாக, நிருவாகத்தின் அனுமதியுடன் தங்களுக்கிடையில் பகிர்ந்தளிப்பதற்கான பொறிமுறை ஒன்றும் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் எண் எழுத்தாற்றல்களையும் வாசிப்பையும் மேம்படுத்த பல திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டன. புத்தாக்க சிந்தனை, ஊக்குவிப்பு, நட்புறவு, அரவணைப்பு, போன்றன அதிபரிடம் நான் கண்ட தலைமைத்துவப் பண்புகளாகும்.

கல்விப்பணிப்பாளர்களுடனும் தனது கிராமத்தவர்களுடனும் அதிபர் தொண்டமான், நெருங்கிய உறவைப் பேணி வந்தார். மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும் நல்ல பிரசைகளை உருவாக்குவதற்காகவும் அவர் பல புதிய செயற்திட்டங்களை பாடசாலையில் அறிமுகப்படுத்தி செயற்படுத்திவந்தார்.

இவ்வதிபரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள, வவுனியா வடக்கு கல்வி வலயம் 'வினைத்திறன்மிக்க பாடசாலையைக் கட்டியெழுப்புவதில் அதிபரின் தந்தோரோபாயங்கள்' என்ற தலைப்பில் தனது தமது வலய அதிபர்களுக்கான செயலமர்வு ஒன்றை ஒழுங்குசெய்திருந்தது. அதில் சுமார் 65 அதிபர்கள் பங்கேற்றனர்.

நேற்றைய தினம் (26. 03. 2024) ஓய்வுநிலை அதிபர் தொண்டமானுக்கு பாடசாலை சமூகம் மாபெரும் பிரியாவிடை நிகழ்வொன்றினை ஒழுங்குசெய்திருந்தது. பாடசாலை வளாகத்தில் ஊரே திரண்டு, மலர் மாலைகள் சூடி, பொன்னாடைகள் போர்த்தி, பரிசில்களும் பொற்கிழிகளும் வாழ்த்து மாடல்களும் வழங்கி அவர் கெளரவிக்கப்பட்டார். அக்குக்கிராமத்தில் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பொன்னாடைகள் அவருக்குப் போர்த்தப்பட்டன. தனக்கு வழங்கப்பட்ட அனைத்தையும், தான் கட்டியெழுப்பிய கலாசாலைக்கே அவர் அன்பளிப்பு செய்துவிட்டார்.

நேற்றைய சேவை நலன் பாராட்டு நிகழ்வில் 'தொண்டமாநாதம்' என்ற மலரொன்றும் வெளியிட்டுவைக்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் 'தாபக அதிபர்' திரு கந்தையா தொண்டமானின் உருவச்சிலை ஒன்றும் வலயக் கல்விப் பணிப்பாளரால் திறந்துவைக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.எம். அர்ஜுன அவர்கள் "எதிர்காலத்தில் இவ்வூர் வரலாறு எழுதப்படும்போது அதிபர் தொண்டமானுக்கென தனி அத்தியாயம் ஒதுக்கப்படும்" எனக்கூறினார்.


இஸட்.ஏ. ஸன்ஹீர்
ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்.
27. 03. 2024













No comments

note