Breaking News

முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கிளை புணரமைப்பு கூட்டத்தில் - மு.கா. பிரதி தேசிய அமைப்பாளர் உதுமாலெப்பை

 (கே. எ. ஹமீட்)

கட்சியின் மத்திய குழுக்களை புறக்கணித்து கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் கலாச்சாரம் கட்சிக் கிளைகள் புணரமைப்பு வேலைத்திட்டம் பூர்த்தியானதும் மாற்றி அமைக்கப்படும் - மு.கா. பிரதி தேசிய அமைப்பாளர்  உதுமாலெப்பை


கட்சியின் மத்திய குழுக்களை புறக்கணித்து கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் கலாச்சாரத்தினால், கட்சியின் கிராம மட்ட கட்டமைப்புகள் சீர் அழிக்கப்பட்டதுடன்  கட்சிக்காக நீண்ட காலமாக அர்ப்பணிப்போடு செயல்பட்ட கட்சி பிரமுகர்களுக்கும் கட்சிக்கும் நீண்ட இடைவெளி ஏற்பட்டது.  இது தொடர்பாக கட்சியின் தலைவரால் நியமிக்கப்பட்ட விசேட குழு கட்சியின் மத்திய குழுக்களினதும், முக்கியஸ்த்தர்களினதும் உணர்வு பூர்வமான விடயங்களை கேட்டறிந்து தலைவரிடம் முன்வைத்தோம். இதன் பின் கட்சித் தலைவரின் விசேட பணிப்புரையின் படி கட்சிக் கிளைகள் புணரமைப்பு வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  


கட்சி கிளைகள் புணரமைப்பு வேலைத்திட்டம் நிறைவு பெற்ற பின் கட்சியின் கட்டமைப்புக்கள் கிராம மட்டத்தில் பலப்படுத்தப்பட்டு கடந்த காலங்களில் கட்சியின் மத்திய குழுக்களை புறக்கணித்து முன்னெடுத்த அரசியல் கலாச்சாரம் மாற்றி அமைக்கப்படும்  என கல்முனை 16ம் வட்டாரத்தில் அமைந்துள்ள 11,12 கிராம சேவகர் பிரிவுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைகள் புணரமைப்புக் கூட்டம் கட்சியின் தேசிய இணைப்பாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான றஃமத் மன்சூர் தலைமையில் நடைபெற்ற போது உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். 


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்


அரசியல் கட்சிகளுக்குப் பின்னால் எத்தனை இலட்சம் மக்கள் உள்ளனர் என்பதனையும், பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகள் எத்தனை பேர் உள்ளனர்  என்பதனையும் கருத்தில் கொண்டே நமது நாட்டின் அரசாங்கங்களும், தேசிய கட்சி தலைவர்களும் எமது கட்சிகளின் தலைவர்களினது கோரிக்கைகளும், எமது சமூகத்தின் கோரிக்கைகளுக்கும் மதிப்பளிப்பார்கள். 


கடந்த கால யுத்த காலத்தில் கல்முனை நகரம் தீ பற்றி எரிந்த போது இந்த நிகழ்வு தொடர்பாக அன்று ஜனாதிபதி பதவியில் இருந்த ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்களிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்கள் தலைவரின் தொலைபேசி அழைப்புக்கு பதில் கொடுக்க வில்லை  அந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவில்லை  இதனால் ஜனாதிபதிக்கும்,  தேசிய கட்சிகளுக்கும், அஷ்ரப் தலைவருக்கும் முஸ்லிம் காங்கிரஸிக்கும்  பின்னால் எத்தனை இலட்சம்  மக்கள் உள்ளனர் என்பதனை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க வில்லை. அதனால் தான் முக்கியமான நமது கல்முனை நகரம் எரிந்து கொண்டிருந்த விடயமாக தலைவர் அஷ்ரபின் தொலைபேசி அழைப்புக்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன பதில் கொடுக்கவில்லை. 


காலப்போக்கில் தலைவர் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி மக்கள் சக்தியையும் மக்கள் பிரதிநிதிகளையும் உருவாக்கினார். நமது நாட்டின் அரசியல் மாற்றங்களுக்கும், ஜனாதிபதிகளை உருவாக்குவதற்கும் தலைவர் அஷ்ரபும் முஸ்லிம் காங்கிரசும், முஸ்லிம் சமூகமும் தேசிய கட்சிகளுக்கு தேவைப்பட்டது. நாம் ஒற்றுமையாக கட்சியை பலப்படுத்தியதனால் தான் எமது சமூகத்துக்காக உரிமைகளும், அபிவிருத்திகளும் எமது காலடிக்கு வந்தன. தலைவர் அஷ்ரப் அவர்கள் அபிவிருத்தி பணிகளை எமது நாட்டில் மூவின மக்களும் பயன்பெறக்கூடியதான வகையில் மேற்கொண்டார்‌.  முஸ்லிம் சமூகத்தின் பலத்தினை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் நாம் எல்லோரும் ஒன்றினைந்து கட்சியினைப் பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். 



நாம் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் போது ஒவ்வொரு எதிர்பார்ப்புக்கள் இருக்கும்  நமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வரை பொறுமையுடன் செயல்பட்டு கட்சி விசுவாசத்துடன் செயல்பட வேண்டும்‌. நமக்கான ஒன்றை இறைவன் நாடினால் இந்த நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து எதிர்த்தாலும் அது கிடைக்கும்  என்ற நம்பிக்கையுடன் செயல் பட வேண்டும். நமக்கான ஒரு விடயத்தினை இறைவன் இல்லாமல் செய்தால் மக்கள் எல்லோரும் சேர்ந்து கொடுக்க முற்பட்டாலும் நமக்கு கிடைக்காது என்ற இறை நம்பிக்கையினை நாம் எமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அன்று நமது தலைவர் அஷ்ரப் அவர்கள் மீதும், அவரின் கொள்கை மீதும், நம்பிக்கை யாகவும் விசுவாச தன்மையுடனும் செயற்பட்டோம். அதனால் கட்சியும் நமது சமூகமும் பயனடைந்தன என்பது வரலாறு ஆகும்.   பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் நமது அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும். எல்லோரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். 


இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ்,பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினறுமான ஏ.சி.சமால்டீன், அரசியல் அதிஉயர் பீட உறுப்பினரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம்.நிஸார், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரானஏ.கே. கலில் றகுமான், சட்டத்தரணி ஷாரிக் காரியப்பர், கல்முனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர்  ஏ. ஹனிபா, மௌலவி எம்.ஐ.எம். றியாஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.




No comments

note