Breaking News

ஒரு தசாப்தத்தில் புத்தளத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம்; மக்கள் மறுமலர்ச்சி முன்னணி

 ரஸீன் ரஸ்மின்

மக்கள் மறுமலர்ச்சி முன்னணி கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும், முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.எம். இல்யாஸூக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று நேற்று (06) இடம்பெற்றது.


புத்தளத்திலுள்ள முக்கிய பிரமுகர்களை நல்லெண்ணம் , புரிந்துணர்வை கட்டியெழுப்பும் நோக்கத்தோடுசந்தித்து வரும் வேலைத் திட்டத்தின் கீழ் மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் முக்கியஸ்தகர்கள் இந்த சந்திப்பை மேற்கொண்டனர்.


இந்த சந்திப்பின் போது கட்சியின் பிரதித் தலைவர் மெளலவி பி.ஏ.எஸ்.சுப்யான் , பொதுச் செயளாலர் எஸ்.எம்.மனாப்தீன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களான ஆசிரியர் முஹம்மது நியாஸ்  , முஹம்மது சப்ராஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


இதன்போது, மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் இலக்கு தொடர்பிலும், புத்தளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் கட்சி இடைவெளிகள் மற்றும் எதிர்காலத்தில் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துரைக்கப்பட்டது.


மேலும், எதிர்வரும்  ஒரு தசாப்தத்தில் புத்தளம் மாவட்டத்தில் பாரிய மறு மலர்ச்சியை ஏற்படுத்துவதே கட்சியின் பிரதான இலக்காகும் எனவும் இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.


இதன்போது, முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மக்கள் மறுமலர்ச்சி முன்னணி கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பகிர்ந்துகொண்ட டாக்டர் எம்.ஐ.எம்.இல்யாஸ், கட்சியின் செயற்பாடுகளை ஆரோக்கியமாக முன்டெடுத்துச் செல்வதற்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.


மேலும், புத்தளம் மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக வாக்குறுதியளித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், உடல் நலக்குறைவினால் தான் ஓய்வில் இருப்பதாகவும் இதனால் கட்சியின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க முடியாமைக்கும் தனது வருத்தத்தை தெரிவித்தார்.


அத்துடன், கட்சியின் கொள்கை திட்டங்களைப் பார்க்கும் போது, இந்த கட்சிக்கு புத்தளத்தில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது எனவும் கட்சியின் நடவடிக்கைகளை நம்பிக்கையுடன் முன்னெடுத்து செல்லுமாறும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.எம். இல்யாஸ் , மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்தார்.




No comments

note