முந்தல் - புளிச்சாக்குளத்தில் பதற்றமான சூழல்; ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள்...!
ரஸீன் ரஸ்மின்
முந்தல் - புளிச்சாக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்றை நேற்று (28) மாலை மறித்து அப்பிரதேச மக்கள் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அந்த இடத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
கொழும்பில் இருந்து நேற்று பிற்பகல் புத்தளம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் முந்தல் - புளிச்சாக்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையின் ஊடாக செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
புளிச்சாக்குளம், பத்துளுஓயா பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பின்னர் குறித்த ரயில் நேற்று மாலை மீண்டும் புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது புளிச்சாக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் அந்த ரயிலை மறித்து நிறுத்திய கிராம மக்கள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பாதுகாப்பற்ற கடவைக்கு தீர்வு பெற்றுத் தருமாறும் முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது, புளிச்சாக்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைக்கு இருவரை நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறும், அவ்விருவருக்கும் உரிய மாதாந்த கொடுப்பனவை ரயில்வே திணைக்களத்திடம் பேசி பெற்றுக் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மாலை 6.00 மணிளவில் புகையிரதத்தை செல்லுவதற்கு மக்கள் அனுமதித்தனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments