புத்தளம் - மஹாகும்புக்கடவல, செம்புக்குளிய பகுதியில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு!
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - மஹாகும்புக்கடவல செம்புக்குளியபகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்படி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
மஹாகும்புக்கடவல , செம்புக்குளிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கணித் தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் உள்நாட்டு துப்பாக்கி ஒன்றினை பயன்படுத்தி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார் என மஹாகும்புக்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மஹாகும்புக்கடவல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மாயா ரஞ்சன் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஆனமடுவ, தட்டேவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் (08) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments