Breaking News

மக்கள் மறுமலர்ச்சி முன்னணி கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவியை சந்தித்து கலந்துரையாடினர்.

 ரஸீன் ரஸ்மின்

மக்கள் மறுமலர்ச்சி முன்னணி கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவியை அவரது இல்லத்தில் சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடியுள்ளனர்.


இந்த சந்திப்பின் போது "மக்கள் மறுமலர்ச்சி முன்னணி ஓர் அறிமுகம்" எனும் பிரசுரம் ஒன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளித்தது,  கட்சியின் நோக்கம் தற்போதைய செயற்பாடுகள், இன்னும் ஒரு தசாப்தத்தில் புத்தளம் மாவட்டத்தில் ஏற்படவுள்ள மறுமலர்ச்சிகள் உட்பட இதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அக்கட்சியின் முக்கியஸ்தர்களால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.


அத்துடன், கட்சியின் அலுவலகம் மக்களின் சேவைக்காக தில்லையடியில் திறக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் எதிர்நோக்கும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதுடன், மூவின மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் திட்டங்கள் உட்பட சிறியளவிலான உதவித் திட்டங்களையும் வழங்கி வருவதாகவும்  எடுத்துரைத்தனர்.


பிரதேசவாதம், இனவாதம் எதுவுமின்றி எமது கட்சி அலுவலைத்தை நாடிவரும் மக்களுக்கு பணியாற்றி வருவதாகவும், புத்தளம் மாவட்டத்தில் தற்போது கட்சிப் பணியை செய்து வரும் நிலையில் எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் எமது பணிகள் தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


மேலும், உள்ளூராட்சி மன்றங்கள் , மாகாணசபை தேர்தல்களில் புத்தளம் மாவட்டத்தில் எமது கட்சி தனித்து போட்டியிட்டு குறிப்பிடத்தக்க பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஆதரவுத் தளம் இருக்கின்றது எனவும் குறிப்பிட்டனர்.


அத்தோடு, பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்ட அரசியல் நீரோட்டத்தினை அவதானித்து புத்தளத்திற்குறிய பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கக் கூடியவாறு ஒற்றுமையுடன் இணைந்தே செயற்படுவதாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.


மேற்படி விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் அரசியல் தூரநோக்கு தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.


அரசியலில் தனக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், அதற்கு தான் மதிப்பளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தன்னால் முடியுமான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் மக்கள் மறுமலர்ச்சி முன்னணி கட்சியின் முக்கியஸ்தர்களிடம் கூறியுள்ளார்.

 

இச்சந்திப்பில் கட்சியின் பிரதித் தலைவர் பி.ஏ.எஸ். சுப்யான் மௌலவியுடன், ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எச்.ஏ. வதூத், உப அதிபர் எம். கியாஸ், பொறியியலாளரும் சட்டத்தரணியுமான எம்.ஐ.எம். ஜபீன்,  எப்.எஸ்.எம்.சப்றாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.





No comments

note