முஸ்லிம் சமூகம் சிவில் நிர்வாக சேவை அதிகாரிகளை அதிகதிகம் உருவாக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது : கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர்
இனவாத சிந்தனைகள் இல்லாத இலங்கையர்களாக நமது பிள்ளைகளை வளர்த்து நாட்டுக்கு உயரிய சேவை செய்பவர்களாக, நாட்டை உயிர்ப்புடன் நேசிப்பவர்களாக எமது எதிர்கால சந்ததிகளை உருவாக்க வேண்டும். நாட்டினதும், சமூகத்தினதும் நலனுக்காக முஸ்லிம் சமூகம் சிவில் நிர்வாக சேவை அதிகாரிகளை அதிகதிகம் உருவாக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது என கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா தெரிவித்தார்.
காரைதீவு பிரதேசத்தின் மூத்த பாலர் பாடசாலைகளில் ஒன்றான மாவடிப்பள்ளி அல்- மதீனா பாலர் பாடசாலை மாணவர்களின் பச்சை விழா நிகழ்வுகள் இன்று (25) மாலை பாடசாலை மண்டபத்தில் பாலர் பாடசாலை முதல்வர் எம்.எச்.எம். அஸ்வர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மிகைத்திறமையான ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டு 27 ஆண்டுகளை கடந்திருக்கும் இந்த பாலர் பாடசாலை பௌதீக வளங்களில் நிறைய குறைகளை கொண்டுள்ளது. அவற்றை நிபர்த்திக்கும் பொறுப்பும் அண்மைய சமூகத்திற்கு உள்ளது. வைத்தியராக, பொறியியலாளராக, சட்டத்தரணியாக தன்னுடைய பிள்ளை எதிர்காலத்தில் வர வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெற்றோர்கள் நல்ல தலைவர்களாக நமது பிள்ளைகள் வளர வேண்டும் என்று எதிர்பார்ப்பது அரிது. இப்போதைய சூழ்நிலையில் நிறைய முஸ்லிம் சிவில் நிர்வாக சேவை அதிகாரிகள் ஓய்வுக்கு சென்றுள்ளனர். இன்னும் சிலர் சிறிது காலத்தில் ஓய்வுக்கு செல்லவுள்ளனர். ஆகவே இனிவரும் காலங்களில் இந்த குறைகளை நாம் நிபர்த்தி செய்ய வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் ஐ.தே.கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினருமான தொழிலதிபர் யூ.எல். ஆதம்லெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் விசேட அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாரக் அலி, டலண்ட் பிளஸ் நிறுவுனர் அல்ஹாபிழ் ஆர்.எம். சில்ஹான், அல்- மீஸான் பௌண்டஷன் இளைஞர் விவகார செயலாளர் ஜெ.எம். ஹசான், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல். வஹாப் உட்பட ஆசிரியைகள், மாணவர்களின் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
No comments