Breaking News

வைத்தியசாலையில் மரணமான நபரின் மரணத்தில் சந்தேகம் : உடற்கூறு பரிசோதனைக்காக ஜனாஸா அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றம் !

(நூருல் ஹுதா உமர், ஹிஷாம் ஏ பாவா) 

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மரணமடைந்த உடலொன்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த உடல் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த 2023.11.23 அன்று 66 வயதுடைய கலந்தர்ஷா ஆதம்பாவா எனும் சாய்ந்தமருது 16 ஐ சேர்ந்த ஒருவர் சண்டை ஒன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாகவும், சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த முதியவருக்கு அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்து வைத்தியசாலை சிகிச்சையளித்து வந்ததாகவும் இன்று (26) அதிகாலை 04.30 மணி அளவில் அவருக்கு உடலில் நோவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளதாகவும், மரணத்திற்கான காரணம் என்ன என்பதை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னரே அறிய முடியும் என்றும் மரணம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸாருக்கு மேலதிக நடவடிக்கைக்காக அறிவித்துள்ளதாகவும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


இன்று காலை காலமான 66 வயதுடைய கலந்தர்ஷா ஆதம்பாவா என்பவரின் குடும்பத்தினர் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் வைத்தியசாலை தரப்பினர் வெளியிடும் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், சாய்ந்தமருது பொலிஸார் சந்தேகநபரின் தரப்பிடமிருந்து கையூட்டு பெற்றுக்கொண்டு ஒரு பக்கசார்பாக நடப்பதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆதம்பாவாவிடமிருந்து வாய்மூல அறிக்கையை பெறுவதிலும் அவர்கள் கால இழுத்தடிப்பு செய்ததாகவும் இந்த மரண விசாரணை நியாயமாக நடைபெற்று குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஊடகங்களே இந்த விடயத்தை உரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.


சாய்ந்தமருது பொலிஸ் நிலைய நீதிமன்ற உத்தியோகத்தர் எம்.எம்.எஸ். முபாரக் (PC88489) துரிதமாக செயற்பட்டு குறித்த கலந்தர்ஷா ஆதம்பாவா என்பவரின் மரணம் கொலையா அல்லது இயற்கை மரணமா அல்லது நோயினால் ஏற்பட்ட மரணமா என்பதை கண்டறிய முன்னெடுத்த நடவடிக்கையின் பயனாக கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.ஆர்.எம். கலீல் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து உடலை பார்வையிட்டதுடன் உடற்கூறு பரிசோதனைக்கு உத்தரவிட்டார். இதனடிப்படையில் உடற்கூறு பரிசோதனைக்காக ஜனாஸா அம்பாறை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.


இந்த மரணம் தொடர்பாக 20 வயதையுடைய சந்தேக நபரை இன்று சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மரணத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எஸ். மோகனவர்ண தலைமையிலான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








No comments

note