செயற்றிறன்மிக்க அதிபர்களை உருவாக்கிய ஆளுமை ஹனிபா - இஸட். ஏ.ஸன்ஹீர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஓய்வு நிலை)
புத்தளம் கல்வி வலயத்தில் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இறுதியாகப் பணியாற்றி ஓய்வுநிலைக்கு சென்றிருக்கும் நண்பன் எஸ். எம். எம். ஹனீபாவுக்கான பிரியாவிடை வைபவமொன்று நேற்றைய தினம் அப்பாடசாலையில் இடம்பெற்றது. அவ்வேளை அவர் பாடசாலை சமூகத்தால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் பெற்றோர், பழைய மாணவர்கள், பள்ளி நிருவாகம் என அனைத்து தரப்பாலும் அன்னாருக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன. கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் அவர்களின் சிறப்புரை ஒன்றும் இங்கு இடம்பெற்றது.
SLBC யில் பணியாற்றும் பிரபல அறிவிப்பாளர் Junaith M Haris நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். Madurankuli Media நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பியது. கலந்துகொண்ட அனைவருக்கும் பகற்போசனம் வழங்கப்பட்டதும் சிறப்பம்சமாகும்.
ஓய்வுபெற்ற அதிபர் எஸ். எம். எம். ஹனீபா பற்றி 'வைர ஒளி' என்ற ஒரு சிற்றேடும் நேற்றைய தினம் வெளியிட்டுவைக்கப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள எனது வாழ்த்துச் செய்தி.
"செயற்றிறன்மிக்க அதிபர்களை உருவாக்கிய ஆளுமை ஹனிபா"
ஆசிரியம் புனிதமானது. ஓர் ஆசிரியனின் முழு முதல் கடமை கற்பித்தல். கற்பிக்கும் பணிக்காகவே சம்பளம் வழங்கப்படுகின்றது. சேவைகளில் சிறந்த சேவை ஆசிரிய சேவை. ஏணிகளாக நின்று ஏற்றிவிடுபவர்கள் அவர்கள். படகுகளாக இருந்து கரைசேர்ப்போர் ஆசிரியர்கள். இது பாடசாலைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. பாடசாலைகளில் ஆசிரியர்களை வழிநடத்துபவர் அதிபர்.
நல்லாசிரியர்கள் பிரதிபலன் எதிர்பாராது தமக்கு பொறுப்பளிக்கப்பட்ட மாணவர் மீதே கண்ணும் கருத்துமாக இருப்பர். அவர்களின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சியுறுவர். வழிகாட்டி வாழவைப்பர். நற்பிரசைகளை உருவாக்கும் இலக்கில் குறியாக இருப்பர். பாடசாலைகளில் அரும்பணியாற்றிய ஆசிரியர்கள் ஓய்வுநிலைக்கு வரும்போது அவர்தம் சேவை நினைவுகூரப்படுவதுண்டு. அவர்கள் ஆற்றிய அரும்பணிக்கேற்ப இது வேறுபடலாம். சேவைகளின் அளவுகோல் பண அலகல்ல. நாம் வழங்கும் பரிசுப்பொருட்களும் நினைவுச்சின்னங்களும் நிலைத்துநிற்கவேண்டும். இதற்கு இம்மலர் ஒரு தக்க சான்று.
ஆசிரியர்களாகப் பணியாற்றிய காலப்பகுதியில் நானும் ஹனீபாவும் சமூகக்கல்வி, வரலாறு சேவைக்காலப் பயிற்சி வகுப்புக்களில் ஒன்றாகக் கலந்துகொள்வோம். அப்போதுதான் எம் நட்பு இறுக்கமானது. நான் ஆசிரிய ஆலோசகராக பணியாற்றிய காலங்களில் பயிற்சிப் பட்டறைகளில் அவர் கலந்துகொள்வார். செயலூக்கத்துடனும் ஆர்வத்துடனும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளும் மறக்கமுடியாத ஆசிரியர் அவர். அப்போதும் அதே நட்பு தொடர்ந்தது. தமிழ்ப் பிரிவைப் பொறுப்பேற்றபின்னர் அதிபர் கூட்டங்களில் சந்திப்போம். அவ்வேளைகளில் நட்புக்கும் அப்பால் அவர் தந்த மரியாதை என்னை சங்கடத்துக்குள்ளாக்கும். எந்தவொரு கூட்டங்களிலும் அவர் கருத்துரைக்கத் தயங்கியதில்லை. அதிபர்களுக்கான சந்தர்ப்பங்கள் வரும்போது அமைதி நிலவும் வேளை, அதிபர்கள் ஹனிபாவை ஏகமனதாக முன்மொழிந்து பேசவைத்த சந்தர்ப்பங்கள் பல. சிங்கள மொழியிலும் உரையாற்றும் வல்லமைமிக்கவர். மனம் கோணாமல் நாசூக்காக பேசி புரியவைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.
இற்றைக்கு இருபத்தியைந்து வருடங்களுக்கும் முன்னர், கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.எம். ஜலீல் அவர்களின் தலைமையில் பெருக்குவட்டான் முஸ்லிம் வித்தியாலயத்துக்கு குழு மேற்பாவைக்காக சென்ற நினைவு வருகின்றது. அப்போது அப்பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.எம். ஹனீபா ஆவார். அன்று அவரின் நிருவாகத் திறமைகளைக் கண்டு நான் வியந்துள்ளேன். அதிபர் காரியாலயத்தில் இருந்த, சித்திரங்களுடன் கூடிய காட்சிப்படுத்தல்களையும் மரபார்ந்த ஆவணங்களை முறையாகப்பேணும்விதத்தையும் கணினிகளின் பயன்பாடுகள் அற்ற அக்காலப்பகுதியில் தேவைக்கேற்ப தகவல்களை இலகுவாகப் பெறக்கூடியவகையில் நவீன உக்திகளைக் கையாண்டு, ஆவணங்களைத் தயாரித்து, இற்றைப்படுத்தி வைத்திருப்பதையும் எமது அதிபர் கூட்டங்களில் நாம் சிலாகித்துக் கூறியுள்ளோம்.
எஸ்.எம்.எம். ஹனீபா, அதிபராகப் பணியாற்றிய பாடசாலைகளில் அவருடன் இணைந்து செயற்பட்ட பலர் செயற்திறன்மிக்க அதிபர்களாக, பாடசாலைகளை வழிநடத்தி வந்துள்ளதனைக் காணலாம். பெருக்குவட்டான் அல்-மின்ஹாஜ் முஸ்லிம் வித்தியாலயத்தில் 09.01.1997 - 14.03.2002 காலப்பகுதியில் அங்கு ஆசிரியர்களாகப் பணியாற்றிய பலர் எமது புத்தளம் கல்வி வலயத்திலும் அதற்கு வெளியிலும் அதிபர்களாக இருந்துள்ளனர் இன்றும் இருக்கின்றனர். அமரர் பொ. ரகுநாதன், ஓய்வுநிலை அதிபர் எம். ஆர். அருளப்பு, ஓய்வுநிலை அதிபர் ஏ.சி. நஜிமுதீன், அதிபர் எம்.எச்.எம். ராசிக், அதிபர் எம். எம் மஃசூர் (முல்லை முஸ்ரிபா) போன்றோர் ஹனிபா அதிபராக இருந்த காலப்பகுதியில் பெருக்குவட்டானில் ஆசிரியப்பணியாற்றியவர்களாவர். மேலும் அவர், கடையாமோட்டை முஸ்லிம் வித்தியாலயத்தில் 26.03.2002 - 19.04.2003 காலப்பகுதியில் அதிபராக இருந்தபோது, ஓய்வுநிலை அதிபர் எம்.எஸ்.எம். ஹில்மி, அதிபர் என்.எம்.நஜீப், அதிபர் எம்.எச். தவ்பீக், யாழ். ஒஸ்மானியா அதிபர் என்.எம். ஷாபி ஆகியோர் ஆசிரியர்களாக சேவையாற்றியுள்ளனர். கனமூலை முஸ்லிம் வித்தியாலயத்தில் பணியாற்றிய 08.04.2013 - 04.04.2018 காலப்பகுதியில் தற்போதைய அதிபர்களான எம்.எம். மஹ்பூப், பீ.எம். முஸ்னி போன்றோர் அங்கு கற்பித்தனர்.
இந்த அதிபர்களின் நிருவாக நடைமுறைகளில் அன்று அவர்கள் பெற்ற அனுபவங்கள் செல்வாக்கு செலுத்தியதனை நான் அவதானித்துள்ளேன். மேற்குறிப்பிட்ட இந்த நல்லதிபர்கள் அன்று ஹனீபா தலைமைத்துவமேற்று வழிநடத்திய பாடசாலைகளில் ஆசிரியர்களாக மட்டுமன்றி பிரதி, உதவி அதிபர்களாக, பகுதித் தலைவர்களாக இருந்து பாடசாலை முகாமைத்துவக் குழுவில் பிரதான பங்கேற்றுள்ளனர். அதிபர் ஹனீபாவில் காணப்பட்ட வேலைகளைப் பகிர்ந்தளிக்கும் தன்மை, ஊக்குவிப்பு, தன்னலம் கருதாத சேவை மனப்பாங்கு, நட்புறவுடன் அரவணைத்து ஆதரவளிக்கும் இயல்பு போன்றன ஆளுமைமிக்க நல்ல பல அதிபர்களின் உருவாக்கத்துக்கு காரணமாயமைந்தன என்பது மிகையல்ல.
நினைவு மலரொன்றில் பதியப்படுபவை வெறும் வார்த்தைகள் அல்ல. சில வசனங்கள் கனதியானவை. வேறு சில ஆழமானவை. இன்னும் சில ஆய்வுகளுக்கும் வழிவகுப்பவை. மலரின் அளவு முக்கியமல்ல. அதன் பதிவுகளே பிரதானம். இதனைப் புரிந்து செயற்படுத்துவதில் எமது பிரதேசம் மேலும் ஆர்வம் காட்டவேண்டும். பலரின் உளப் பதிவுகள் இன்று இங்கு காலத்தால் அழியாத பதிவுகளாக்கப்பட்டுள்ளன. தனி நபர் நினைவுகூரல் என்பதற்கு அப்பால், எம்மை அடையாளப்படுத்தி உறுதிப்படுத்தும் ஆவணங்களில் இதுவும் ஒன்று. இதற்காக கனமூலை முஸ்லிம் மகாவித்தியாலயம் எடுத்த முயற்சி பாராட்டப்படவேண்டியது.
ஓய்வு நிலையிலும் ஓயாமல் உழைக்கும் நண்பன் ஹனீபா தேகாரோக்கியத்துடனும் மன அமைதியுடனும் வாழ்ந்து, தொடர்ந்தும் தனது சமூக உயர்வுக்கு சேவையாற்ற வல்ல அல்லாஹ்வை வேண்டுகின்றேன். அவர்தம் குடும்பத்துக்கும் அல்லாஹ் அருள்பாலிப்பானாக.
இஸட். ஏ. ஸன்ஹிர்
உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஓய்வு நிலை)
20. 09. 2023
No comments