"புன்னகை தென்றல் கமர்தீன் காக்கா" - அஷ்ஷெய்க் எம்.ஏ.எல். பஸ்லுல் பாரிஸ் (நளீமி)
(சேர்! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய ஒரு நினைவு மலர் இன்று கனமூலை மு.ம. வி இருந்து வெளிவருகிறதாம். அது எனக்கு பேரானந்தத்தை தருகிறது. ஆனால் அம்மலர் இதழின் ஓர் ஓரத்திலேனும் உங்களைப் பற்றி ஒற்றை வரி எழுத சந்தர்ப்பம் தரப்படவில்லை என்பதை எப்படி நீங்கள் அறிந்திருக்க முடியும்? ஒருவேளை வெளி நபர்களிடம் ஆக்கங்கள் கோரவில்லை போலும். ஆனால் எனது பங்கிற்கு எதையும் எழுதாவிட்டால் 'மார்க்' கேள்வி கேட்பாரே?!)
எனக்கு கமர்தீன் காக்கா என்று அறிமுகமானவர்தான் ஹனீபா சேர்.ஹனீபா என்று அவர் பெயரை அறிந்திருந்ததை விட கமர்தீன் என அறிந்து வைத்திருந்த காலம்தான் அதிகம். கொத்தாந்தீவு கரீம் மாஸ்டர் பெரியப்பா வீட்டிலிருந்து கற்ற காலத்தில் அவருக்கும் கரீம் பெரியப்பா குடும்பத்திற்குமிருந்த ஆத்மார்த்தமான உறவு என்னிலும் படர்ந்திருந்தது. ஆழ வேர் விட்டிருந்தது. அது அத்தியந்த உறவு.
80 களுக்கு பிற்பட்ட காலத்தில் கொத்தாந்தீவு சமூகத்திலிருந்து பல்கலைக்கழக வாய்ப்புக்கான வாயில்களை திறந்தவர்களுள் இவரும் ஒருவர். எங்களுக்கு பல்கலைக்கழக கனவை தந்தவர்களும் இவர்கள்தான். குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பை பெற்றிருந்தும் அதைத் தவிர்த்து ஆசிரியப் பணியைத் தெரிவு செய்ததாக குறிப்பிட கேட்டிருக்கின்றேன். (பின்னாட்களில் அறிந்து கொண்டவை).
நான் நான்காம், ஐந்தாம் வகுப்புகளில் கற்றுக்கொண்டிருந்த காலம். அவர் பெருக்குவட்டான் அல்மின்ஹாஜில் ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். நாங்கள் பாடசாலை சென்றுகொண்டிருப்போம்; சமீரகமை பாதைக்குத் திரும்புகின்ற T Junction இல் ஆசிரிய இளவல்கள் ஒன்று சேர்ந்திருப்பார்கள். அந்தக் காலைப் பொழுதில் பறவைகளின் ரீங்கார இசை, மெல்ல வந்து தழுவும் தென்றல் இவற்றோடு மகிழ்வு பிரவாகித்துப் பாயும் இவ்விளம் ஆசிரியர்களின் கலகலப்பு, சிரிப்பொலி கொத்தாந்தீவின் காலைப் பொழுதை சுறுசுறுப்பூட்டும் கொஞ்சலாக கண்டிருக்கின்றேன். அப்போது அவர்கள்தான் எங்கள் ஹீரோக்கள். அவர்களுள் பளிச்சென்று பிரகாசிக்கும் புன்னகை மன்னன் கமர்தீன் காக்கா மிடுக்காக நின்றிருப்பார். அவர் கதைக்கும் பாணி, நகைச்சுவை, ஆடையணிந்திருக்கும் அழகு, தலை சீவியிருக்கும் வசீகரம், அவரது Brown colour Shoue, Ladies Cycle என எல்லாமுமாக இன்னும் பல என் மனக் கண்களுக்குள் அப்படியே பசுமையாக காட்சி தருகின்றன.
இதுபோல் அவரது நண்பர்களின் மாலையமர்வு உரையாடல்களை செவிமடுத்திருக்கின்றேன். அதில் கல்வி, பண்பாடு, சன்மார்க்க, சமூகப் பணி பற்றிய கலந்துரையாடல் இடம்பெறும். அவ்வப்போது சூடுபிடிக்கும் வாதப் பிரதிவாதமாகவும் மாறும். சமூகம் பற்றியும் சமூக மாற்றம் பற்றியும் எதிரும் புதிருமான கருத்தாடல்கள் அந்த மாலை அமர்வுகளில் இடம்பெறும். அங்கெல்லாம் கமர்தீன் காக்காவின் விரிந்த அறிவுத் தேடலை சிறுவனாக புரிந்தும் புரியாமலும் ரசித்திருக்கின்றேன். என் வாழ்வில் இன்று வரையான பயணப் பாதையில் அந்த அமர்வுகளின் வாசம் வீசும்.
கமர்தீன் காக்கா எனும் ஹனீபா சேர் சிறந்த நல்லாசான். வாசிப்புப் பண்பாட்டைக் கொண்டவர் என்ற வகையில் பல்துறை ஆற்றல் மிக்க ஆசானாக இருந்தார் என்பதற்கு பல சான்றுகளுண்டு. அவர் வகுப்பறைக்குள் நுழைந்தால் அப்பாடவேளை கலைகட்டுமென அவரது நேரடி மாணவர்கள் சொல்ல கேட்டிருக்கின்றேன். பூசை விழுந்தாலும் அங்கு தீக்குச்சி கனல் கக்கும் என்பார்கள்.
அவர் என்னிடம் கூறிய ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. “மாணவர்களுக்கு வீட்டு வேலை கொடுத்திருந்தேன். மறுநாள் அவற்றை மதிப்பிடுவதற்காக மாணவர்களின் பயிற்சிக் கொப்பியை பார்வையிட்ட போது ஒரு மாணவன் கொப்பியை வழங்கவில்லை. எனக்கு கோபம் வந்துவிட்டது. அவனிடம் காரணத்தைக் கேட்காமல் கடுமையாக தண்டித்து விட்டேன். பிறகுதான் தெரிய வந்தது அன்றிரவு மழை பெய்து வீடு ஒழுகி விளக்கணைந்த செய்தி” என்று இந்நிகழ்வு இடம்பெற்று பல ஆண்டுகளுக்குப் பின்னரும் இதனை நினைவுபடுத்திய போது அவர் கண்கள் கசித்திருந்தன. மாணவர்களின் எதிர்காலத்திற்காய் இதயத்தால் பணி செய்தவர் அவர். அதிபர் பணியை பொறுப்பேற்ற பின்னரும் வகுப்பில் பின்தங்கியிருக்கும் மாணவர்களை அதிபர் காரியாலயத்திற்கு அழைத்து அவர்களது கௌரவம் பாதிக்கா வகையில் இரகசியமாக எண்ணும் எழுத்தும் கற்றுக் கொடுத்து அம்மாணவர்களின் வாழ்வு ஒளிமயமாக ஒரு மெழுகுவர்த்தியேனும் கையில் கொடுத்திட வேண்டும் என செயற்பட்ட ஆசானாக இருந்திருக்கின்றார். ‘இன்று நாங்க நல்ல நிலையில் இருக்க ஹனீபா சேர் ஒபீஸ்ல வேலை வாங்குவது போல பாசாங்கு காட்டி படிச்சு தந்ததுதான் காரணம்’ என பலர் அவரை நினைவுகூர்வதை செவிமடுத்துள்ளேன்.
ஹனீபா சேர் அர்ப்பண சிந்தை நிறைந்த தலைவர்; சிறந்த அதிபர். பெருக்குவட்டான் அல்மின்ஹாஜ், கடையாமோட்டை மு.ம.வி, கொத்தாந்தீவு மு.ம.வி, கனமூலை மு.ம.வி போன்ற பாடசாலைகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். அவரது அழகுணர்ச்சியை அவர் வழி நடாத்திய பாடசாலைகளில் காணலாம். பாடசாலையின் சூழலை சோலையாக்குவதிலும் கூடிய கவனம் செலுத்துவார். மரங்களை நேசிக்கும் ஈர ஜீவனது. ஒட்சிசனை காற்றுக்கு காத்துக் கொடுக்க தன் ஜீவியத்தை வழங்கிய தியாகி அவர்.
அவரது பை நானறிந்த காலங்களிலெல்லாம் நிறைந்திருந்தது கிடையாது. ஆனாலும் உள்ளம் செல்வத்தால் நிரம்பி வழிந்தோடியது. கொடுப்பதற்கு முந்திக்கொள்ளத் துடிப்பவர். மாணவர்களுக்கும் பாடசாலைக்கும் தன் பையிலிருந்து பங்கு போக வேண்டும் என்பதில் பேரவா கொண்டவர். தனது சட்டை பைக்குள்ளும் Trouser பைக்குள்ளும் கையை விட்டு தேடும் அந்தக் கொடைக் கரங்கள் பற்றி என்ன சொல்வது! எப்படி சொல்வது?!
தன் குடும்ப வாழ்வில் எத்துணை பெரிய பொருளாதார நெருக்கடிகள் வந்தபோதும் டியுஷன் மாபியாவுக்குள் அகப்பட்டுக்கொள்ளாதவர். தான் கற்பிக்கின்ற பாடசாலை மாணவர்களுக்கு மாலை நேரத்தில் கற்பித்ததற்காக ஒருபோதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளிடம் கை நீட்டி பணம் பெற்றிருக்கமாட்டார் என உறுதியாக கூற முடியும். தன் வழிகாட்டலின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களும் இலவசக் கல்விக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அடிக்கடி வலியுறுத்துவார். தனது பணத்தை பாடசாலைப் பணிகளுக்கு செலவு செய்து நெருக்கடிகளை எதிர்கொண்ட சந்தர்ப்பங்கள் பல அவருக்குண்டு. அதிலொன்றுதான் தானும் தனது மனைவியும் உம்ரா செல்வதற்காக ஏற்பாடு செய்திருந்த பணத்தை கனமூலை பாடசாலையின் கட்டடப் பணியை நிறைவு செய்வதற்காக வழங்கி அதனை அரசிடமிருந்து மீளப்பெற்றுக்கொள்ளவதற்கிடையில் மாதங்கள் பல உருண்டோடி உம்ரா கிரியையை பிற்போடவேண்டியேற்பட்டது.
தன் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆளுமைகளாக உருவாக வேண்டுமென தூண்டுபவர். உயர் கற்கைகள், நிர்வாக முகாமைத்துவ அறிவு, எழுத்துத்துறைப் பங்களிப்புகள், பேச்சிலக்கியம் என பன்முக ஆளுமைகளாக பிரகாசிக்க வேண்டுமென விரும்புவார். ‘எனது நூலாக்கப் பணிகளுக்கு ஹனீபா சேரின் தூண்டலும் பிரதான காரணம்’ என என் மனைவி அடிக்கடி ஞாபகப்படுத்துவார். மற்றுமொரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும்; பொதுவாக அதிபர்களின் பிள்ளைகள் பாடசாலையில் நிழல் அதிபர்கள்தான்; வெகுசிலர் விதிவிலக்கு; ஹனீபா சேரின் பிள்ளைகள் தந்தை அதிபராக இருக்கும் பாடசாலையை விட்டுவிட்டு வேறு பாடசாலையில் கற்கவே விரும்பியிருப்பார்கள். விசாரணை என்றாலும் தண்டனை என்றாலும் இவர்களுக்கு அவை இரட்டிப்பாகவே கிடைக்கும்.
கமர்தீன் காக்கா எனும் ஹனீபா சேர் ஒரு சிறந்த தந்தை என்பதற்கு அவரது பிள்ளைகள் நற்சான்று. அவர்களுக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் வழங்குவதில் அவர் வெற்றி பெற்றிருக்கின்றார். மார்க்கப் பற்று, அறிவு, ஆற்றல், புத்தாக்க சிந்தனை, துணிவு, இரக்கம், பாசம், சமூக வாஞ்ஞை போன்ற மனிதத்துவ மாண்புகளை தன் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்த்திருக்கின்றார்.
கமர்தீன் காக்காவின் சமூக, சன்மார்க்கப் பணியின் தளமும் விசாலமானது. முஸ்லிமல்லாத சகோதர சமூகங்களுடனான அவரது உறவு பலமானது. அரச அதிகாரிகளிடம் தனித்துவமான அடையாளத்தை பேணிவருபவர். தமிழ், சிங்கள மொழிகளுக்கிடையிலான உறவுப் பாலமாக திகழ்கின்றவர். தேர்ந்த மேடை மொழிபெயர்ப்பாளர்; சொற்பொழிவாளர்; ஒரு கவிஞன்; கலைஞன் என இம்மண் கண்ட அரிதான ஆளுமை எனலாம்.
இந்த ‘ஹனீபா’வை தம் கருவிலும் மடியிலும் சுமந்து சமூகத்தின் கரத்தில் தந்த தாயும் தந்தையும் எம் பிரார்த்தனைக்குரியவர்கள். இறையருள் அவர்களை சூழ்ந்து கொள்ளட்டும். ஹனீபா எனும் ஆளுமையின் உருவாக்கத்திற்குப் பின்னால் நல்லாசான்கள் இருந்திருப்பார்கள். உறவுகள், நண்பர்கள் இருந்திருப்பார்கள். ஆனால் அவரது சமூகப் பங்களிப்புக்குப் பின்னால் நான் எப்போதும் அன்பாய் ‘ராத்தா’ என்றழைக்கும் அவரது அன்பு மனைவி நிச்சயம் இருந்தார் என்பதற்கு மறுமையிலும் சாட்சி சொல்லுவேன்.
புன்னகைத் தென்றலே! நீ சகல சௌபாக்கியங்களும் ஈருலகிலும் பெற வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
கனமூலை பாரிஸ்
No comments