Breaking News

அல்குர்ஆனின் அடிப்படையில், நபிகள் நாயகத்தை பின்பற்றி ஒழுகுவதிலேயே நமது விமோசனம். மீழாதுன் நபி செய்தியில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்

மனித குலத்தின் சகல பிரச்சினைகளுக்குமான தீர்வு அல்குர்ஆனின் போதனைகளிலும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலுமேயே தங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள மீலாதுன்- நபி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் .


அதில், அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


அறியாமை மலிந்து, வெறுமை படர்ந்திருந்த அரேபிய பாலைவனத்தில், அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்),  தமது 63 ஆண்டுகால வாழ்வில் சாதித்து விட்டுச் சென்றவை இன்றும் என்றும் கோடிக்கணக்கான முஸ்லிம்களை நேர்வழியின் பால் இட்டுச்செல்லும் ஆற்றல் வாய்ந்தவை மட்டுமல்ல, இம்மை மறுமை இரண்டிலும் ஈடேற்றத்தை ஈட்டித்தர வல்லவையும் ஆகும்.


 உலகில் யுத்த மேகங்கள் சூழ்ந்து, அறநெறிக் கோட்பாடுகள் அறவே அற்றுப்போய், ஜனநாயக விழுமியங்கள் மண் கௌவிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்திலும் கூட, அல் குர்ஆனின் வழி நின்று, சிறப்பாக வாழ்ந்து காட்டி இறைத்தூதர் விட்டுச் சென்ற வரலாற்றுச் சான்றுகளில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஏராளமான படிப்பினைகள் பொதிந்துள்ளன.


எதிரிகள் மத்தியில், "இஸ்லாமோபோபியா" எனப்படும் இஸ்லாத்தின் மீதான அச்ச உணர்வு மேலோங்கியதன் விளைவாக, உள்நாட்டிலும் உலக நாடுகளிலும் முஸ்லிம்கள் சொல்லொணாத்  துன்ப, துயரங்களை அனுபவித்து வரும் வேளையில், அல்குர்ஆனின் அடிப்படையில், நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை பின்பற்றி ஒழுகுவதிலேயே நமது விமோசனம் முற்றுமுழுவதுமாகத் தங்கியுள்ளது.




No comments

note