முஸ்லிம் மீடியா போரம் மாவனெல்லையில் நடத்தும் ஊடகக் கருத்தரங்கு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள "21 ஆம் நூற்றாண்டில் ஊடகம்" எனும் தொனிப்பொருளில் 74 ஆவது மாணவர் ஊடகக் கருத்தரங்கு நாளை 29 ஆம் திகதி சனிக்கிழமை மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரியில் நடைபெறும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், பதுரியா மத்திய கல்லூரி அதிபர் ஏ.எல்.ஏ. ரஹ்மான் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இரு அங்கங்களாக நடைபெறும் இக்கருத்தரங்கில், கலாநிதி எம்.சி.ரஸ்மின், தாஹா முஸம்மில், ஜாவித் முனவ்வர், அஷ்ரப் ஏ சமட் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
பதுரியா மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் அனுசரணையுடன் நடைபெறும் இக்கருத்தரங்கின், சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பங்களாதேஷின் உயர்ஸ்தானிகர் தாரிக் முஹம்மத் ஆரிபுல் இஸ்லாம் பிரதம அதிதியாகவும் பேராதனைப் பல்கலைக்கழக இஸ்லாமிய அரபு கற்கைத் துறையின் முன்னாள் தலைவர் எம்.ஐ.எம்.அமீன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்வர்.
மாணவர்களுக்காகவும் ஊடகப் போதனை நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் கேகாலை மாவட்ட முஸ்லிம் மீடியா போர அங்கத்தவர்களுக்காகவும் இரு கருத்தரங்குகளாக நடைபெறும் என மீடியா போரத்தின் கேகாலை மாவட்ட இணைப்பாளர் அமீர் ஹுஸைன் தெரிவித்தார்.
நிகழ்வில் போரத்தின் உப தலைவர்களுள் ஒருவரான எம்.ஏ.எம்.நிலாம், பொருளாளர் எம்.எம். ஜெஸ்மின், இணை தேசிய அமைப்பாளர் சாதிக் ஷிஹான், கேகாலை மாவட்ட முன்னாள் இணைப்பாளர் ஊடகவியலாளர் ஆதில் அலி சப்ரி உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்தோடு சஞ்சாரம் கலைஞர் குழுவின் விசேட கலாசார நிகழ்ச்சியும் நிகழ்வில் அரங்கேற்றப்படவுள்ளதாக கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் முக்கியஸ்தரான பாரா தாஹிர் தெரிவித்தார்.
No comments