சகோதர இனத்தவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வது குறித்து மாணவர்களை பழக்க வேண்டும் : அக்கரைப்பற்று பெரியபள்ளிவாசல் விஜயத்தின் போது வலியுறுத்தினார் முப்தி யூசுப் ஹனிபா
நூருல் ஹுதா உமர்
இலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவரான முப்தி யூசுப் ஹனிபா அவர்கள் அக்கரைப்பற்று பெரிய பள்ளி வாயிலுக்கு வருகை தந்து பள்ளிவாயல் வளாகத்தினை சுற்றி பார்வையிட்டார். இதன்போது பள்ளிவாயலின் சுற்றுச்சூழல் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிவாயலில் இடம்பெறும் அண்மைக்கால நிகழ்வுகளை பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தவர், அச்செயற்பாடுகளை பாராட்டிய வேளை பள்ளிவாசல் வளாகத்துடன் இளையவர்களின் தொடர்புகளை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் அதற்காக பள்ளி வாயல் வளாகத்தில் விளையாடக் கூடிய விளையாட்டு ஒழுங்குகள் பற்றியும், இளையவர்களுக்கான பொழுதுபோக்கு சூழல் உருவாக்கப்பபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம். சபீஸ் தலைமையிலான நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய முப்தி யூசுப் ஹனிபா அவர்கள் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் கடந்த வருட சாதாரண தரத்தில் கணித, விஞ்ஞான பாடங்களில் பெற்ற பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் இஸ்லாம் பாடத்தின் அடைவு மட்டம் மிகவும் வீழ்ச்சி அடைந்திருப்பதாக புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி கவலையை வெளியிட்டதுடன் எமது பிள்ளைகளின் இஸ்லாம் பாடத்தின் மீதான வீழ்ச்சி பெற்றோராகிய எம்மை முதியோர் இல்லம்வரை அழைத்துச் செல்லும் அபாயம் உள்ளதை மனதில் வைத்து உடனடியாக சாதாரண தர மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளை வடிவமைத்து இக்குறையை நிவர்த்தி செய்ய பள்ளிவயல் நிருவாகம் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அத்துடன் ஏனைய சமூகங்களின் உணர்வுகளை மதிக்கக் கூடியவர்களாக எமது சக இனங்களோடு சகவாழ்வை பேணி நடக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி கருத்து வெளியிட்ட அவர், இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படும் போது மட்டும் தீர்வுகளை தேடிச் செல்கின்றவர்களாக நாம் இல்லாமல் எப்போதும் சக இனங்களின் சிவில் சமூக தலைவர்கள் மற்றும் மதப் பெரியார்கள் போன்றவர்களுடன் நல்லுறவை கட்டி எழுப்பி ஏனைய சமூகங்களுடன் கலந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டுமே தவிர கரைந்து போய் விடக்கூடாது என்பதையும் வலியுறுத்திப் பேசினார்.
No comments