மழை வேண்டி குனூத் ஓதுமாறு அம்பாறை மாவட்ட உலமா சபை வேண்டுகோள்
(ஏயெஸ் மெளலானா)
மக்களால் தாங்கிக் கொள்ள முடியாதளவில் நீடித்துச் செல்கின்ற
அதிகூடிய வெப்பம் நிறைந்த காலநிலையை தணிப்பதற்காக மழை பொழிய வேண்டி ஐவேளைத் தொழுகைகளிலும் குனூத் ஓதுமாறு அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (11) பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியில் மேற்படி உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் தலைமையில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக இவ்வேண்டுகோள் விடுக்கப்படுவதாக அதன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாசிர்கனி தெரிவித்தார்.
இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஐவேளைத் தொழுகைகளிலும் குனூத் அந்நாஸிலாவை ஓதுமாறு பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் இமாம்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், வெள்ளிக்கிழமை குத்பாவில் மழை வேண்டி விஷேடமாக பிரார்த்திக்குமாறும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் மழை வேண்டி தொழுகை நடத்துமாறும் அம்பாறை மாவட்ட உலமா சபை வேண்டுகோள் விடுப்பதாக செயலாளர் ஏ.எல்.நாசிர்கனி தெரிவித்தார்.
No comments